வீதியில் செல்லும் யாசகர்களுக்கு கூட மேடைகளை அமைத்து அவற்றில் ஏற முடியும் : பொதுஜன பெரமுனவை கடுமையாக சாடும் மைத்திரி !

பொதுஜன பெரமுனவால் மீண்டும் எவ்வாறு மீண்டெழ முடியும்? வீதியில் செல்லும் யாசகர்களுக்கு கூட மேடைகளை அமைத்து அவற்றில் ஏற முடியும். அது எமக்கொரு பிரச்சினையல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் நாட்டில் ஓரளவு சுமூகமான நிலைமையை ஏற்படுத்தியுள்ள போதிலும் , அவரது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடமிருந்து பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சு.க.வின் இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புக்களின் வருடாந்த மாநாடு 29 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வரவு - செலவு திட்டத்தை பார்க்காமல் அது தொடர்பில் கருத்துக்களை வெளியிட முடியாது. வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் அறிந்து கொண்டதன் பின்னரே அது வெற்றியடையுமா அல்லது தோல்வியடையுமா என்று கூற முடியும்.

தற்போதைய வரி அறவீடுகள் மக்கள் தாங்கிக் கொள்ளக் கூடியவாறானவை அல்ல. எனவே அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். அரசாங்கம் செல்லும் பாதை தொடர்பில் மக்களுக்கு திருப்தியில்லை. எனவே நாமும் மக்கள் சார்பிலேயே செயற்படுவோம்.

அடுத்த வருடம் தேர்தல் இடம்பெறும் என்று கூறுகின்றனர். ஆனால் எந்தத் தேர்தல் என்று எமக்குத் தெரியாது? எந்த தேர்தலானாலும் நாம் கூட்டணியாக போட்டியிடுவோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் நாட்டில் சற்று சுமூகமான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றார்.

ஆனால் அவருக்கு பொதுஜன பெரமுனவிடமிருந்து பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவே தோன்றுகிறது. பொதுஜன பெரமுன மீண்டும் மீண்டெழ முயற்சிப்பதாகக் கூறுகின்றனர்.

ஆனால் அக்கட்சியால் எவ்வாறு மீண்டெழ முடியும்? எந்தவொரு நபருக்கும் மேடைகளில் ஏற முடியும். வீதியிலுள்ள யாசகர்களுக்கு கூட மேடைகளை அமைத்து அவற்றில் ஏற முடியும். எனவே அது ஒரு பிரச்சினையல்ல என்றார்.

இதே வேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,

எனது ஆட்சி காலத்தில் உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டாலும் , தற்போது எதிர்கொள்வதைப் போன்ற நெருக்கடிகளை அன்று மக்கள் எதிர்கொள்ளவில்லை.

வருடத்திற்கொருமுறை சர்வதேச கணக்காய்வாளர்கள் வருகை தந்து முன்னாள் ஜனாதிபதிகளினுடைய வீடுகளிலுள்ள பொருட்கள் தொடர்பில் சோதனைகளை முன்னெடுப்பர். ஆனால் கடந்த மூன்றரை வருடங்களில் அவ்வாறு எந்த செயற்பாடும் இடம்பெறவில்லை.

கதிர்காமத்திலுள்ள உத்தியோகபூர்வ ஜனாதிபதி இல்லத்தில் காணப்பட்ட சுமார் 3 கோடி பெருமதியுடைய தொலைக்காட்சிகள் இரண்டும், அநுராதபுரத்திலுள்ள உத்தியோகபூர்வ ஜனாதிபதி இல்லத்தில் காணப்பட்ட தொலைக்காட்சியொன்றும் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

தொலைக்காட்சிகளை எடுக்குமளவிற்கு எனது பொருளாதார நிலைமை மோசமடையவில்லை. என்னிடம் அந்தக் கொள்கையும் கிடையாது.

நான் அமைச்சராக பதவி வகித்த காலத்திலும் , ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் அரச சொத்துக்களில் ஒரு சதமேனும் மோசடி செய்திருந்தால் எனக்கு தண்டனை வழங்குமாறு சவால் விடுக்கின்றேன்.

நாம் எமது செயற்பாடுகளை நேர்மையாகச் செய்தால் எதிர்பார்க்கும் இடத்திற்குச் செல்ல முடியும். தற்போது எமக்குள்ள பிரதான பிரச்சினை நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதாகும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல் , மோசடிகள் அற்ற ஆட்சியாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்களில் 70 சதவீதமானோர் பாரதூரமான மோசடிகளிலேயே ஈடுபடுகின்றனர். எனவே தற்போது பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்று பாராளுமன்றம் ஒருபுறத்திலும் , மக்கள் பிரிதொரு புறத்திலும் இருந்து செயற்படுகின்றனர். தற்போதுள்ள 225 பேரில் குறைந்தபட்சம் 100 பாராளுமன்ற உறுப்பினர்களாவது சிறந்த கல்வி அறிவுடைய , நிபுணத்துவம் மிக்கவர்களாகக் காணப்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்புவது இலகுவானதாக அமையும் என தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App