இலங்கை குறித்த ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் புதிய பிரேரணை மீதான அமர்வு ஆரம்பம் !

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று 06 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இவ்வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக 10 இற்கும் குறைவான வாக்குகளே கிடைக்கும் என்றும், ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதுடன் இம்முறை இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு, அதுகுறித்த விவாதமும் இடம்பெற்றது.

அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இணைந்து 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் தயாரித்துள்ள புதிய பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
Published from Blogger Prime Android App