அமைச்சரவையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படுமே தவிர, கிசுகிசு செய்திகளுக்கு அல்ல : பந்துல குணவர்தன !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை.

அமைச்சரவையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படுமெ தவிர, கிசுகிசு செய்திகள் அல்ல என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் , அரசாங்கம் என்ற ரீதியில் இது தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் தெரிவிக்க முடியாது. அரசாங்கம் என்ற ரீதியில் அமைச்சரவையில் இது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. அவ்வாறு ஏதேனும் காணப்பட்டால் அடுத்த ஊடக சந்திப்பில் அது குறித்து தெரியப்படுத்தப்படும்.


அமைச்சரவையில் அநாவசிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட மாட்டாது. அதற்கென வழமையான நிகழ்ச்சி நிரலொன்று காணப்படுகிறது. குறித்த நிகழ்ச்சி நிரலுக்கமைய அவரவருக்கு தத்தமது மதத்தை வழிபடுவதற்கும் முதலில் வாய்ப்பளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து சமூகமளித்துள்ள அமைச்சர்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும்.

அதன் பின்னர் வருகை தந்துள்ள அமைச்சர்கள் முந்தைய வாரங்களில் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் காணப்பட்டால் அவற்றை தெரியப்படுத்துவர். திருத்தங்கள் இல்லையெனில் ஏனைய அமைச்சரவை பத்திரங்கள் எடுத்துக் கொள்ளப்படும். இவற்றுக்கு அப்பால் வேறு ஏதேனும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் காணப்பட்டால் , அவை தொடர்பில் மாத்திரமே அவதானம் செலுத்தப்படும். எனவே அமைச்சரவை கூட்டத்தின் போது எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்பட மாட்டாது என்றார்.

அமெரிக்காவிலுள்ள முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ , தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதியுடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும், தேர்தல்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதாகவும், தேர்தலுக்காக கூட்டணியமைப்பதில் அரசியல் ரீதியான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App