பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச பொறிமுறை உள்ளீர்க்கப்பட வேண்டும் - இரா.சம்பந்தன் !

இலங்கையில் இழைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்துடான பொறிமுறையொன்றை புதிய பிரேரணையில் உள்ளீர்க்க வேண்டுமென்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பிரேரணையொன்று கொண்டுவரப்படுகின்றது.

இந்தப் பிரேரணையை கொண்டுவரும் முயற்சிகளை எடுத்துள்ள, பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மன், கனடா போன்ற நாடுகள் அதனை முழுமையான நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன், நிறைவேற்றப்படும் பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான உரிய பொறிமுறைகளும் வகுக்கப்பட வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த 13ஆண்டுகளாக பொறுப்புக்கூறலுக்கான செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. எடுக்கப்பட்ட ஒருசில முயற்சிகளும் திருப்திகரமானதாக இல்லை. இவ்வாறான நிலையில், தான் புதிய பிரேரணையொன்று தற்போது கொண்டு வரப்படவுள்ளது.

ஆகவே, குறித்த பிரேரணையில், இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் அதேவேளை, அதனை நடைமுறைச்சாத்தியமாக்கும் வகையிலான சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்துக்கான ஏற்பாடுகளை உள்ளீர்க்க வேண்டியது அவசியமாகின்றது.

இந்தவிடயத்தில் இணை அனுசரணை வழங்கும் பிரித்தானியா தலைமையிலான நாடுகள், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்டவை விசேட கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Published from Blogger Prime Android App