சிங்கப்பூருக்கு அருகில் விபத்துக்குள்ளான படகு : மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு!

சிங்கப்பூருக்கு அருகில் வியட்நாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் ஹோசிமினில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனை வியட்நாம் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

மீட்கப்பட்ட அனைவரும் நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவர்களது குடியுரிமை மற்றும் ஏனைய தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் பின்னர் அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் 303 இலங்கையர்களுடனான படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கப்பலில் இருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரியது.

அதன்படி, குறித்த நாடுகள் முன்னெடுத்த நடவடிக்கையில், ஆபத்தில் இருந்த படகுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த ஜப்பானிய சரக்குக் கப்பல், இலங்கையர்களைக் காப்பாற்றியது. மீட்கப்பட்டவர்களில் 264 ஆண்களும்19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App