இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தோட்ட தொழிலாளி ஒருவருக்கு நட்ட ஈடாக 40 இலட்சம் ரூபாய் வழங்கி வைப்பு !

தோட்ட நிர்வாகத்தின் அழுத்தத்தின் பேரில் பலவந்தமாக பணிக்கு அமர்த்தப்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த நமுனுகல கனவரெல்ல தோட்ட தொழிலாளி ஹர்ஷன் கணேஷ்மூர்த்தியின் மரணத்துக்கு நட்டஈடாக 40 இலட்சம் ரூபாவை கடுமையான போராட்டத்தின் மூலம் நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ளது.

இதற்கான காசோலையை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்,பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் இன்று குறித்த குடும்பத்தினருக்கு வழங்கி வைத்தனர்.

நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனம் உயிரிழந்த இளைஞனுக்கு மரண சடங்கிற்கான செலவு உட்பட 15000 ரூபாய் மாத்திரமே நட்ட ஈடு வழங்க முடியும் என தெரிவித்திருந்தது.

இத்தொகையை பெற்றுக் கொள்ள வேண்டாம் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அக்குடும்பத்தினருக்கு அறிவித்திருந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்படும் வரையில் இளைஞனின் பூதவுடல் அடக்கம் செய்யபடாது என தெரிவித்த செந்தில் தொண்டமான் இளைஞனின் பூதவுடலை தொழிற்சாலையில் வைத்து, நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

இச்சம்பவம் குறித்து நமுனுகலை பெருந்தோட்ட நிறுவனம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தது. அம்முறைப்பாடிற்கு இ.தொ.கா இடமளிக்காமையால் தொழில் அமைச்சில முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 14ம் திகதி தொழில் அமைச்சில், தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் உயிரிழந்த தொழிலாளிக்கு உரிய நட்ட ஈட்டை வழங்குவது தொடர்பில் இ.தொ.கா தோட்ட நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உயிரிழந்த இளைஞனுக்கு 40 இலட்சம் ரூபாய் தருவதாக இப்பேச்சுவார்தையின் மூலமாக முடிவு செய்யப்பட்டது.

இந்த நட்டஈடு தொகை குறித்து இளைஞனின் குடும்பத்தார் மற்றும் தோட்ட மக்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் விருப்பத்திற்கு அமைய இ.தொ.காவின் தொடர் போராட்டத்தினால் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தோட்ட தொழிலாளி ஒருவருக்கு நட்ட ஈடாக 40 இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.Published from Blogger Prime Android App