​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது : விமல் வீரவன்ச !

கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக, உத்தர லங்கா கூட்டணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு முன்னர், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் காப்பாற்றுமாறு, தாம் இறைவனிடம் பிரார்த்தித்ததாகவும், இதன் இறுதி விளைவு முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்வதாகும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழையும் வரை முன்னாள் ஜனாதிபதிக்கு அந்த விடயம் தெரியாது. அத்துடன், ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த பாதுகாப்புத் தலைவர் ஒருவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தவறான தகவலை அளித்து, (அண்டர் கொண்ட்ரோல் – Under control Sir) நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தற்செயலாக, முன்னாள் ஜனாதிபதி, தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை பார்த்தபோது, ​போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்ததைக் கண்டார். அந்தத் தருணத்திலேயே மாளிகையின் பாதுகாப்பு நிலைமை குறித்து அவர் அறிந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எனவே, லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கேர்னல் கடாபி கொல்லப்பட்டது போன்று கோட்டாபய ராஜபக்சவையும் கொல்லும் திட்டம் இருந்ததாகவும், அமெரிக்க தூதுவரின் பிரார்த்தனை கூட அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.Published from Blogger Prime Android App