தமிழர் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் ஜனாதிபதியன் முயற்சி வரவேற்கத்தக்கது. ஆனால்.... (இரா.சாணக்கியன்)

நாட்டின் பொருளாதார நிலை மோசமான கட்டத்திலேயே இருக்கின்றது. பொருட்களுக்கான தட்டுப்பாடும் நீங்கவில்லை. பொருட்கள் இருந்தாலும் அதை கொள்வனவு செய்வதற்கான இயலுமை நுகர்வோரிடம் இல்லாத நிலமையே காணப்படுகின்றது. இந்நிலையிலேயே 75வது சுதந்திர தினத்திற்கு முன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் ஜனாதிபதியன் முயற்சி வரவேற்கத்தக்கது. 

மேற்கண்டவாறு பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் 15வது கழக நாளில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மட் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் 

வடக்குக்கு மட்டுமோ அல்லது கிழக்கிற்கு மட்டுமோ என்று தனித்தனியாக அல்லாமல் வடக்கு கிழக்கு மக்களின் 74 ஆண்டுகளாக போராடிவரும் அரசியல் உரிமைக்கான முழுமையான தீர்வாக அமைந்தால் மட்டுமே அது எமது மக்களாலும் எம்மாலும் ஏற்றுக்கொள்ளப்படும். 

எமது மக்களால் நிராகரிக்கப்படும் எந்த தீர்வுக்கும் எம்மால் நிச்சயமாக ஆதரவு அளிக்க முடியாது. ஆனால் சரியான தீர்வாக இருந்தால் அதற்கு நாம் பக்கபலமாக இருந்து செயற்படுவோம். அரசியல் கைதிகளின் விடுதலையை நல்ல அடையாளமாகக் காண்கின்றோம். இதேபோல் ஏனைய எமது அரசியல் கைதிகள் அனைவரும் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும். 

அதன் மூலம் நல்ல புரிந்துணர்வொன்றை அரசு எற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இது அரசியல் தீர்வுக்கான நல்ல ஆரம்பமாக அமையும். தற்போது நாடு முழுக்க போதைவஸ்து பாவனை பற்றி பிரஸ்தாபிக்கப்படுகின்றது. அதற்கு எமது பிரதேசங்களும் விதிவிலக்கல்ல. ஏதோ ஒரு சக்தி இதற்குப் பின்னால் இருக்கின்றது. 

இதுபற்றி பிரதேசங்கள் தோறும் விழிப்புக் குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட அபிவிருத்திக் குழுகூட்டங்களில் முற்கூட்டியே வலியுறுத்தியபோதும் சபையின் தலைவரோ அல்லது மாவட்ட அரசாங்க அதிபரோ இவ்விடயத்தில் அக்கறை காட்டவில்லை. 

எனவே நாம் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் அமைப்புக்கள் கழகங்கள் ஒன்றிணைந்து இதற்கான கண்காணிப்புக் குழுக்களை அமைத்து விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும். எமது இளைய சமூகத்தை நாமே காப்பாற்ற வேண்டும். 

நாம் கல்வி மற்றும் அபிவிருத்திகளுக்கு சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் மூலம் நல்ல பல காரியங்களை முன்னுரிமை கொடுத்து கடந்த 8 வருடங்களாகச் செய்து வருகின்றோம். ஆனால் தற்போது அரச அதிகாரிகளோடு எமது குறித்த அமைப்பு தொடர்புகளை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் இங்குள்ள மாற்று அரசியல்வாதிகளின் மகத்தான சேவை. 

10 கிலோ மீற்றர் வீதிகளை அமைப்பதற்கான எனது ஒதுக்கீட்டை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்குவதில் உள்ள ஊழல்களை முறைகேடுகளை நான் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தேன். ஆனால் அதை தற்போது அரசியல் ஆதாயம் கருதி திரிவு படுத்தி விமர்சிக்கின்றார்கள். 

இங்குள்ள மாற்று அரசியல்வாதிகளின் தொழிற்பாடு இதுதான். இதை மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தகையோர் இருக்கும் வரை அத்தகையோருக்கு வேண்டியவர்களும் அவர்களும் தங்களின் அபிவிருத்தியை மட்டும் செய்து கொள்வார்களே தவிர எமது பிரதேசத்தை அல்ல என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

எனவே எதிர்காலத்தில் மக்கள் இவர்களை ஒதுக்குவார்கள் என்பது எனது நம்பிக்கை. இவர்கள் இருக்கும் வரை எமக்கு விடிவு வராது. காலம் மாறும். Published from Blogger Prime Android App