ஆசிரியைகள் சேலை அணிவதை கட்டாயமாக்கும் புதிய சுற்றறிக்கை இன்று

பாடசாலை ஆசிரியைகள் சேலையை தவிர வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு கடமைக்காக வர முடியாது என பொதுநிர்வாக அமைச்சு இன்று (நவ.23) சுற்றறிக்கையை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பல பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியைகள் புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் கடமை நிமித்தம் பாடசாலைகளுக்கு வரும்போது புடவை உடுத்தியே வரவேண்டும் எனவும், அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கல்வி அமைச்சு கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் பெண்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்து பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்றினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்

ஆசிரியத் தொழிலில் உள்ள அனைத்து பெண் ஆசிரியர்களும், தங்கள் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று தங்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆண்கள் குழு ஒன்று கூடி பெண்களின் ஆடைகள் குறித்து முடிவெடுப்பது நகைச்சுவையான விஷயம் என அவர் கூறினார்.

பெண்கள் அரச அலுவலகங்களுக்கு பணிக்கு வரும்போது உரிய ஆடைகளை அணிந்து வரலாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள போதிலும் அது பெண் ஆசிரியர்களுக்கு பொருந்தாது எனவும் கல்வி அமைச்சு இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App