நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் பற்றாக்குறைக்கு நிதி நெருக்கடி காரணமல்ல : ராஜித்த சேனாரத்ன !

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் பற்றாக்குறைக்கு நிதி நெருக்கடி காரணமல்ல என முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மருந்து பொருட்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சிக்கல் நிலையே இதற்கு காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு உயிர் பாதுகாப்பு மருந்துகள் 14, அத்தியாவசிய மருந்துகள் 636, அத்தியாவசியமற்ற மருந்துகள் 400 என மொத்தமாக அரசாங்கத்திற்கு 1050 மருந்துகள் அவசியமாகும்.

எனினும் அத்தியாவசிய மருந்துகள் 636 இல் 185 மருந்துகள் நாட்டில் இல்லை. அத்தியாவசியமற்ற மருந்துகள் 400 இல் 190 மருந்துகள் இல்லை.

உயிர்பாதுகாப்பு மருந்துகளில் டீ என் டீ முழுமையாக தீர்ந்துவிட்ட நிலை காணப்படுகின்றது. மாரடைப்பு நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு மாதத்திற்கு போதுமான சேலைன் மாத்திரமே களஞ்சியத்தில் காணப்படுகின்ற நிலையில், மூன்று மாதத்திற்கு தேவையாக சேலைன் களஞ்சியத்தில் காணப்படுவது அவசியமாகும். புற்றுநோய்க்கான மருந்துகள் 40 இல் 15 மருந்துகள் இல்லை. புற்றுநோயற்ற மருந்துகள் 40 இல் 25 இல்லை இதற்கு காரணம் நிதி நெருக்கடியல்ல. மருந்துக்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட காலதாமதமே இதற்கு காரணம்.

இந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் கொலேஜ் ஒப் பாமாகொலேஜ் இடம் அறிக்கை ஒன்றை கேட்டுள்ளது. மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதி இருந்தும் ஏன் இறக்குமதி செய்யவில்லை என அவர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பினார்.

அவசர மருந்து கொள்வனவிற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்பட்ட போதிலும் ஏன் கொள்வனவு செய்யவில்லை.

இதேவேளை தனியார் மருந்தகங்களில் மருந்துகளின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. பெனடோல் ஒன்றின் விலை 4.16 சதம் வரை அதிகரித்துள்ளது. ஒக்மண்டின் 60 ரூபாவிலிருந்து 141.86 ஆக அதிகரித்துள்ளது. சினெட் 500 மில்லிகிராம், 72.50 ஆக காணப்பட்டது ஆனால் தற்போது 171.65 சதம் ஆக அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படாமல் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய செயற்பட வேண்டும் என ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.Published from Blogger Prime Android App