சிறுவர்களின் போஷாக்கின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படத்தயார் : சந்திரிகா !

சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் பங்குதாரராக இல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சேவையாக சிவில் சமூகத் தலைவர்களுடன் இணைந்து அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குக்கான தேசிய கூட்டுப் பொறிமுறையின் இரண்டாவது கூட்டம் கடந்த புதன்கிழமை (16) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (ஜனாதிபதி செயலகத்தின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு) சாந்தனி விஜேவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, முன்னாள் கல்விச் செயலாளர் கலாநிதி தாரா டி மெல், தற்போது பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் அவய அமைப்பின் விஜித நாணயக்கார மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு ஆகியோர் இதில் பங்குபற்றினர்.

சிறார்கள் மத்தியில் தற்போது நிலவும் போசாக்கு குறைபாடு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன் போது வலியுறுத்தினார்.

200 நாடுகளில் மிக மோசமான போசாக்கின்மை உள்ள பத்து நாடுகளில் இலங்கையும் தற்போது இருப்பதாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பால், முட்டை மற்றும் காய்கறிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயற்திட்டங்களை விரைவுபடுத்துதல், வெளிநாட்டு உதவியின் அடிப்படையில் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை முறைப்படுத்துதல், உணவு வழங்குவதில் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பை எவ்வாறு பரவலாகக் கிடைக்கச் செய்வது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது. இந்த பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக அமுல்படுத்த இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் பங்குதாரராக இல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சேவையாக சிவில் சமூகத் தலைவர்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்காக அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App