உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு !

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எல்லை நிர்ணயக் குழுவின் பதவிக்காலம் 2023 பெப்ரவரி 28ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான எல்லை நிர்ணயம் செய்வதற்கான, தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவரும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பில் அரசியல் கட்சிகள், குடியியல், சமூகக் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உட்பட்ட ஐந்து பேர் இந்தக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஜயலத் ஆர்.வி.திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் இந்தக்குழுவின் உறுப்பினர்களாவர்.

உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரதமர் தினேஷ் குணவர்தன தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.Published from Blogger Prime Android App