அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் இன்று முதல் ஆரம்பிப்பு !

அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீனவர்களின் மண்ணெண்ணெய் பிரச்சினையைத் தீர்த்து வைத்த அதே பொறிமுறையைப் பயன்படுத்தி எதிர்வரும் 3 நாட்களில் அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெயை விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

நவம்பர் 23 முதல் நவம்பர் 27 வரை மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு 229 மண்ணெண்ணெய் பௌசர்கள் வழங்கப்பட்டுள்ளன.

நவம்பர் 1ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை தினமும் 29 பௌசர்கள் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

இதன்படி, புதிய வேலைத்திட்டத்தின் கீழ், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நாளாந்தம் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பௌசர்களின் எண்ணிக்கை சுமார் 45 ஆக அதிகரித்துள்ளதாகவும் இது 17 வீத அதிகரிப்பாகும் எனவும் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

போதிய எரிபொருள் கையிருப்பில் இருந்த போதிலும் கள ஆய்வுகள் இன்றி, தேவைகள் குறித்த தவறான அறிக்கைகளை வழங்கியமையால் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App