1.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் இளைஞர்களின் சுகாதார நிலையை மேம்படுத்த நடவடிக்கை : சுகாதார அமைச்சு !

பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சுகாதார நோக்கங்களுக்காக ஜப்பானிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 105 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தின் கீழ், பெண்கள் மற்றும் இளைஞர்களின் சுகாதார நிலையை மேம்படுத்த பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், சுகாதார மேம்பாட்டு பணியகம், மகளிர் விவகார அமைச்சு , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடும்ப சுகாதார திட்டமிடல் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்த திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.

மூன்று வருட திட்டமான இத்திட்டத்தின் நிறைவு விழா நேற்று BMICH இல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

முழு சுகாதார சேவையிலும் சுகாதார கல்வி முறையிலும் இலங்கை பெருமை கொள்கிறது என தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, தரமான சுகாதார சேவை பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார் .

1994 ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற மக்கள்தொகை மற்றும் அபிவிருத்தி குறித்த சர்வதேச மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்த்திட்டத்தில் அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தனியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் உலகளாவிய ரீதியில் இளைஞர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1/4 பேர் 10 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், 10 முதல் 19 வயது வரையிலானவர்கள் 16% மாத்திரமே எனவும் தெரிவித்தார்.

சுகாதாரப் பாதுகாப்புக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது உட்பட இளைஞர்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதில் இந்த வகையில் கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App