2023ஆம் ஆண்டு ஆரம்பப் பிரிவில் முதலாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்படாது : கல்வி அமைச்சர் !

2023ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள பாடசாலைக் கல்வியாண்டில் ஆரம்பப் பிரிவில் முதலாம் தவணைப் பரீட்சைகளை நடத்தாமல் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் மதிப்பீட்டு செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சியாக கல்வி கற்க கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
எதிர்காலத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக மேலதிக பயிற்சி,கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான மாற்றங்கள் செய்து வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். விடுமுறை நாட்களை குறைத்து அதிகளவில் வேலை செய்வதன் மூலம் அனைத்துப் பாடத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மீளமைக்கப்படும்.

தேவையான சீருடைகள், பாடப்புத்தகங்கள், உடற்பயிற்சி புத்தகங்கள், உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்குவது சிரமமானதாக இருந்தாலும் குறித்த நேரத்தில் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.Published from Blogger Prime Android App