நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்று சேர்ந்தால் அனைத்து பாரிய பிரச்சினைகளையும் பின்தள்ளிவிட்டு நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக முடியும் : ஜனாதிபதி !

இன, மத மற்றும் மக்களின் கவலைகளை கடந்த காலத்தை நோக்கி பின்தள்ளி போடுவதன் மூலம் 75ஆவது சுதந்திர தினத்தின்போதாவது நாடடின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிர்த்துக் கொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது போல நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் பங்களிப்புச் செய்தால் இந்த இலக்கை அடைய முடியுமென்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், இது எளிதான விடயம் அல்லாத போதும் சாதிக்க முடியாத விடயம் என்பதற்கில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அரசியல்வாதிகளால் மட்டும் இதனை சாதிக்க முடியாது என்றும் இதற்கு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாகி 50 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (03) இரவு ஷெங்கிரிலா ஹோட்டலிலுள்ள லோட்டஸ் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதிக்கான கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஒட்டுமொத்த அமைப்பு முறையும் இளைய தலைமுறையினரால் கேள்விக்குட்படுத்தப்படும்போது நாம் அனைவரும் சவாலுக்கு உள்ளாக நேரிடுகிறது. இது பொருளாதார சவாலிலும் பார்க்க பாரதுரமானது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த கால காயங்களை ஆற்றுவதா அல்லது அதனை மேலும் வளரவிடுவதா என தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது நாட்டுக்கு கிடைத்துள்ளது.

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல் இன, மத வேறுபாடு மற்றும் மக்களின் சில யதார்த்தமான கவலைகளால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்று சேர்ந்தால் அனைத்து பாரிய பிரச்சினைகளையும் பின்தள்ளிவிட்டு 75ஆவது சுதந்திர தின நிகழ்வின்போது நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இது தத்தமது கருத்துக்களுக்கு வரவேற்பளிப்பதற்கும் மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை உள்ளடக்கிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கும் அதேவேளை அரசியலமைப்புக்குட்பட்ட அரசாங்கமொன்றை முன்னெடுத்துச் செல்வதற்கும் வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முதற் பெண்மணி தலைமை பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரும் உரையாற்றினர். ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா வரவேற்புரையையும் சட்டத்தரணி குஷான் டி அல்விஸ் நன்றியுரையையும் ஆற்றினர்.Published from Blogger Prime Android App