கூட்டமைப்பு பிரிந்து போட்டியிட்டால் அதிக ஆசனங்களை கைப்பற்றலாம் : எம்.ஏ சுமந்திரன்

தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது தொடர்பில், பங்காளிக் கட்சிகளுடன் சமரசமாக பேச்சு நடத்திய பின்னரே முடிவு எடுப்போமே தவிர தனித்து தீர்மானத்தை

எடுப்போமென்று கூறவில்லையென தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இல்லாமல், கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக தேர்தல்களில் போட்டியடுவதென தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகிருந்தன. இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனிடம் கேட்ட போதே இவ்வாறு அவர் பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சி தனியாக போட்டிடுவதென்பது, தமிழரசுக் கட்சியின் தனி முடிவல்ல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்தே இந்த முடிவை எடுக்க தீர்மானித்துள்ளோம்.

தற்போதுள்ள தேர்தல் முறையின் அடிப்படையில் நாங்கள் போட்டியிடுவோமாக இருந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற மூன்று கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதாக இருந்தால் கூடுதலான ஆசனத்தை பெறக்கூடிய வாய்ப்புள்ளது.



சில சபைகளில் அவ்வாறு போட்டிடுவதால் ஆசனங்கள் அதிகரிக்குமென கூற முடியாது. ஆனால் சில இடங்களில் அதிகரிக்கலாம். சில இடங்களில் குறையலாம். நாங்கள் பலமாக இருக்கின்ற பிரதேசங்களில் போட்டியிட்டால், எல்லா வட்டாரத்தையும் ஒரே கட்சி வெல்லுமாக இருந்தால் மட்டுமே விகிதாசாரத்தில் வருகின்ற ஆசனத்தை பெற்றுக் கொள்ள முடியும். ஒரே கட்சியாக போட்டியிட்டால் வட்டாரங்களில் கூடுதலாக வென்றால் விகிதாசார முறையில் நமக்கு ஆசனங்கள் கிடைக்காது.

இந்த கணக்கை அடிப்படையாக வைத்துத் தான் ஒரு தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் இதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றோம். இது சம்பந்தமாக பங்காளி கட்சிகளான பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதனுடனும் , சித்தார்த்தனுடனும் பேசியிருக்கின்றேன்.எனவே அவர்களுடன் பேசித்தான் இந்த விடயத்தை அறிவித்திருந்தோம்.

ஆனால் நாங்கள் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கவில்லை. ஒவ்வொரு பிரதேசத்திலும், ஒவ்வொரு சபையிலும் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வைத்து நாங்கள் அந்த முடிவை எடுப்போம். சில வேளைகளில் சில இடங்களிலே சேர்ந்து போட்டியிடலாம். சில இடங்களில் தனித்தனியே போட்டிடலாம். எனவே அந்தந்த சூழ்நிலைக்கேற்றவாறு தொழில்நுட்ப ரீதியாக அந்த தீர்மானங்கள் எடுக்கப்படும்.

பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் இந்த முடிவை எடுப்போமே தவிர நாங்கள் தமிழரசு கட்சியை தனித்து தீர்மானத்தை எடுப்போமென நாங்கள் கூறவில்லை. பங்காளி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசித்தான் முடிவை எடுப்போமென தெரிவித்தார்Published from Blogger Prime Android App