சுங்க திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அரச சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை !

இலங்கை சுங்க திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அரச சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை போதைப்பொருள் சோதனைகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை பொலிஸாருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திற்கு நேற்று (21) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, போதைப்பொருள் சுற்றிவளைப்பு உட்பட பொலிஸாரின் சோதனைகளுக்கு பயன்படுத்துவதற்கு, இந்த வாகனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வாகனங்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போதுள்ள 600 பொலிஸ் நிலையங்கள் மற்றும் புதிதாக நிறுவப்படவுள்ள 111 பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகளுக்கு வாகனங்கள் போதுமானதாக இல்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

சட்டவிரோத இறக்குமதி காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட சில வாகனங்கள் சுமார் ஏழு வருடங்களாக பாழான நிலையில் துறைமுகத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், அந்த வாகனங்கள் தொடர்பில் நிலவும் சட்டத் தடைகளை நீக்கி, மக்களின் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்துவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App