உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தக் கோரும் ரிட் மனுக்களை பரிசீலனை செய்ய முடிவு !

உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு ரிட் மனுக்களையும் எதிர்வரும் 2023 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்சன யாப்பா, லக்ஸ்மன் கிரியெல்ல, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இணைந்து தாக்கல் செய்துள்ள மனுவும் நேற்று (16 ) ஆராயப்பட்ட போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, குமுதினி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் இதற்கான உத்தரவினை பிறப்பித்தனர்.

மனுகளில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவித்தல் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடத்தின் முதலாவது காலாண்டிற்குள் நடத்த வேண்டும் என்றாலும், அதனை பிற்போடுவதனூடாக நாட்டு மக்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்படுவதாக தெரிவித்து குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App