அம்பாறை மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்கள் !

வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்கள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனால் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.காலை முதல் மாலை வரை மப்பும் மந்தாரமுமாக இருந்த நிலையில் இடையிடையே சிறிய மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பெரியநீலாவணை, சாய்ந்தமருது ,மருதமுனை, பாண்டிருப்பு , அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில் , போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு ,காற்றின் திசை மாற்றம் , நீரோட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள திசை மாற்றம் கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக இவ்வாறான காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதினாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.கடற்கரை பகுதியில் உள்ள சுமார் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பரப்பு கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் தென்னைகளுகம் கடலரிப்பால் மருதமுனை பகுதியில் அழிந்துள்ளன. இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் இப்பிரதேச கடற்கரை பிரதேசத்தில் தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளது.

மேலும் கடலரிப்பினால் கல்முனை கடற்கரைப் பகுதிகளில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் கடந்த சுனாமி பேரலைத் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.Published from Blogger Prime Android App