அண்மையில் பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை புரிந்தமை தொடர்பாக நீதி விசாரணைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்தில் இருந்து கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் ஆகியோருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரின் முறைப்பாட்டுக்கு அமைவாக எதிர்வரும் 13.12.2022 அன்று பிரதிவாதிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்தின் 6வது மாடியில் அமைந்துள்ள குழு அறையில் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
11.11.2022அன்று மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவன் செல்வன் சுதாகரன் வர்ஷனன் பரீட்சை பகுப்பாய்வில் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டநிலையில் தற்கொலை புரிந்தமை தொடர்பாக நீதி விசாரணையை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கொளரவ ரோகினி அமரசிங்க அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையிட்டு எதிர் வரும் 13.12.2022 அன்று பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை கள் அனுப்பப்பட்டுள்ளன.
தேசிய கல்வி கொள்கைகளுக்கு முரணாக நடாத்தப்படும் பரீட்சை பகுப்பாய்வில் மாணவர்கள் கடும் மனஉளச்சல், சுயகொளரவம்(Dignity) பாதிக்கப்பட்ட நிலையில் மகிழ்ச்சியான கற்றல் செயற்பாடுகளிளருந்து மனவிரக்தி அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இவ்விடயங்கள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இன் தலைவர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையிட்டு வாக்கு மூலம் அளிப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொலிஸ்தலைமை காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.