சீனி வரி மோசடி தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானம்!

சீனி வரி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆங்கில பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதற்கு வேறு திகதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பந்துல குணவர்தனவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஆனால் குறித்த தகவல்களை தயார் செய்ய அவகாசம் தேவை என்பதை சுட்டிக்காட்டி அவர் வேறு திகதியை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

சீனி வரி மோசடியினால் திறைசேரிக்கு 16 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தான் அப்போது வர்த்தக அமைச்சராக இருந்தும் ஒரு கிலோ சீனிக்கான ஐம்பது ரூபா வரியை இருபத்தைந்து சதமாகக் குறைக்கும் தீர்மானம் தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். அந்த தீர்மானத்தை எடுக்குமாறு பல அரச அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்

சீனி வரி குறைப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே வெளியிடப்பட்டதாக நிதியமைச்சின் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம் பெறவுள்ளதாக அறிய முடிகிறது .Published from Blogger Prime Android App