எல்லை நிர்ணயம் இனப் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடக்கூடாது! -பூபாலப்பிள்ளை பிரசாந்தன்
உள்ளூராட்சி மன்ற தேர்தலை மையப்படுத்தியதாக எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது அது மாறாக தமிழ் இஸ்லாமிய மக்களிடையே இனப் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடக்கூடாது என தமிழ் மககள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்
தேசிய எல்லை நிர்ணயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய எல்லைகள் நிர்ணய ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் மேலும் குறிப்பிடுகையில்

தென்பகுதி மக்களுடன் கிழக்கு மாகாணத்தினையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு  பல்வேறு எச்ச குன்றுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மாகாணமாகும்   அத்தோடு வாகரை, கிரான்  மண்முனை மேற்கு, மன்முனை தென்மேற்கு, ஏறாவூர் பற்று, போரதீவுப் பற்று ஆகிய பிரதேசங்கள் அதிக நிலப்பரப்புகளைக் கொண்ட பிரதேசங்களாகவும், மக்கள் தொகை ஐதாக வாழ்கின்ற பிரதேசமாக காணப்படுகின்றது இப்பிரதேசத்தில் சனத்தொகையினை மையமாக வைத்து எல்லைகளை நிர்ணயிக்கின்ற போது அங்கு தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதி ஊடாக பூரணத்துவமான உள்ளூராட்சி அதிகாரங்களை மக்கள் நுகர முடியாத சூழல் ஏற்படுகின்றது  
மண்முனைப் பற்று, ஏறாவூர் பற்று, கோறளைப் பற்று பிரதேசங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் எல்லைப்புறங்களில் வாழ்வதன் காரணமாக அங்கு அடிக்கடி எல்லை பிரச்சினைகளும் ஏற்படுகின்ற பிரதேசமாகும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டே 
வட்டார எல்லைகள் வடிவமைக்கப்பட வேண்டும் . மன்முனை தென்எருவில் பற்று பிரதேசத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்படுகின்ற போது குறித்த பிரதேசங்களின் சமூக கலாச்சார பிணைப்புகள் பிரிக்கப்படாத  நிலையினை கருத்திற் கொள்ள வேண்டும், 
யுத்த அசாதாரண சூழ்நிலையின் போது  அரச நிர்வாகங்களை மேற்கொள்வதற்கு அருகிலுள்ள பிரதேச செயலகங்களோடு இணைப்புச் செய்யப்பட்ட நிலை இன்று வரை  கொண்டிருப்பதும் விரும்பத்தக்க விடயம் அல்ல. இவற்றினை சீர் செய்து கொண்டு எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்