அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்தும் வகையில் வர்த்தமானி ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை !

இந்நாட்டுக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்தும் வகையில் வர்த்தமானி ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் நெற்செய்கை தோல்வியடைந்த நிலையில் இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற கணிப்பு காரணமாக இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்ய நுகர்வோர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவு 675,288 மெற்றிக் தொன்களாகும். அதற்கு செலவிடப்பட்ட தொகை 73,627 மில்லியன் ரூபாய்களாகும்.

எவ்வாறாயினும், கடந்த சிறு போகத்தில் விளைச்சல் அதிகரித்துள்ளமை மற்றும் இவ்வருட பெரும் போகத்தில் 675,600 ஹெக்டேரில் நெற்பயிற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு 2023ஆம் ஆண்டு எமது நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என விவசாய அமைச்சர் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்த நிலையில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.Published from Blogger Prime Android App