கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என்ற பொதுநிர்வாக அமைச்சு செயலாளரினால் கடிதம் : ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றில் மனு!

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வதிலிருந்து விலகிக்கொள்ளுமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் அனுப்பட்டுள்ள கடிதத்துக்கு எதிராக ரிட் மனுவொன்று உயர் நீதிமன்றில் நேற்று (ஜன 11) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, நாடளாவிய ரீதியிலான அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் உட்பட 85 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 10ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால், அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும், வேட்பாளர்களிடமிருந்து கட்டுப் பணத்தை ஏற்க வேண்டாம் எனத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு கடிதத்தை வெளியிடுவது சட்டத்திற்கு முரணானது எனவும், இதன் மூலம் மக்களின் சர்வஜன வாக்குரிமையும் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடமிருந்து கட்டுப் பணத் தொகையை ஏற்க வேண்டாம் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கடிதத்தை ரத்து செய்து எழுத்தாணை பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, குறித்த கடிதத்தின்படி செயற்படுவதைத் தவிர்க்குமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

மேலும், குறித்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த அறிவித்தலை மீள பெற்றதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு மாவட்ட செயலாளர்கள், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்திருந்தார்.Published from Blogger Prime Android App