கடமையை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் அகிலா

கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட அகிலா கனகசூரியம் இன்று(02) திங்கட்கிழமை கடமையை பொறுப்பெற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநரிடம் இருந்து நியமனக் கடிதத்தை இன்று பெற்றுக் கொண்ட இவர், மாகாணக்கல்வி அலுவலகத்தில் தனது கடமையையும் பொறுப்பெற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வரும் இவர், கல்வி நிர்வாக சேவை வகுப்பு 1ஐ சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியும் ஆவார்.

கல்வி நிர்வாக சேவையில் 1999ஆம் ஆண்டு தை மாதம் இணைந்து கொண்டுள்ளார். 24வருடங்களாக கல்வி நிர்வாக சேவையில் சேவையாற்றி வரும் இவர், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நீண்ட காலமாக திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளதுடன், மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி உள்ளார்.

2017ம் ஆண்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார் இன்றுவரை கடமையாற்றி வருகின்றார்.
2017இல் 98கல்வி வலயங்கள் இலங்கையில் காணப்பட்டன. தேசிய பொதுப்பரீட்சைகளில் குறித்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 98ஆவது கல்வி வலயமாக காணப்பட்டுள்ளது.


குறித்த வலயக்கல்விப் பணிப்பாளரின் புதிய திட்டங்களின் ஊடாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 2021ம் ஆண்டிற்கான தேசிய கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை தரப்படுத்தலில் 43ஆவது இடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குறித்த கல்வி வலயத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. கணித அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் பொருட்டு இலகு கையேடுகள், சகபாடி கற்றல் செயற்பாட்டையும், பாடசாலையில் மெல்ல கற்கும் மாணவர்களின் வரவு மற்றும் ஆற்றலை விருத்தி செய்யும் பொருட்டு விளையாட்டு, சித்திரம், கலை போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்தல் செயற்றிட்டத்தினையும் அறிமுகப்படுத்தி இருந்தார்.


மேலும், மூன்றுகட்ட அலகுப்பரீட்சை, பாடசாலைகளை இணைத்த கருத்தரங்குகள், சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் தயாரித்து பரீட்சை நடாத்துதல், மாணவர் சந்திப்பு, பெற்றோர் சந்திப்பு போன்றவற்றை பாடசாலைகள் தோறும் நடாத்துதல், திறன் வகுப்பறை விஸ்தரிப்பு, வலய, கோட்ட மட்டத்திலான இணைப்பாட விதான செயற்பாட்டு முகாம்கள் போன்ற பல்வேறு செயற்றிட்டங்களை செயற்படுத்தியுள்ளார்.


மேலும், புதிதாக சூப்பர் ஜீனியர் ப்ரைன் போட்டியையும் அறிகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களது வாண்மை விருத்தியை அதிகரிக்கும் நோக்கோடு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சியையும், வெளிநாட்டவர்களைக் கொண்டு நடாத்தியிருந்தமை எடுத்துக்காட்டத்தக்கது. முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு தொண்டு நிறுவனங்கள், அமைப்புக்கள், தனிநபர்களின் உதவியுடன் இதனை தற்காலிகமாக இவர் நிவர்த்தி செய்யுள்ளார்.Published from Blogger Prime Android App