இலங்கை இந்திய நாடுகளுக்கிடையேயான கூட்டு வேலைத்திட்டம் - கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்!


Published from Blogger Prime Android App


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று (20) நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, சமூக விடயங்களுடன் முதலீட்டு நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இ;லங்கை எதிர்நோக்கியுள்ள நிலைமையினை இந்தியா நன்கு புரிந்துகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜெயசங்கர், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்திய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் வழங்கும் எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது புதிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதுடன், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இணையவழியூடாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக அபிவிருத்தித் திட்டங்களின் (HICDP – High Impact Community Development Project) வரையறைகளை நீடிப்பது தொடர்பான இரு தரப்பு ஒப்பந்தமும் இங்கு கைச்சாத்திடப்பட்டது. அதில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர்; கைச்சாத்திட்டனர்.

இவ்வொப்பந்தம் 2005ஆம் ஆண்டு மே மாதம் 300 மில்லியன் இலங்கை ரூபாவிற்கு தனிநபர் வேலைத்திட்டத்தின் வரையறையாக கைச்சாத்திடப்பட்டு, இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழிகாட்டும் வகையில் இன்று 600 மில்லியன் இலங்கை ரூபாவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2017இல் இந்திய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களால் இலங்கைக்கு வழங்கும் பரிசாக நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டிய கண்டிய நடனத்திற்கான பயிற்சி நிறுவனத்தினை இணையவழியூடாக திறந்து வைத்தார்.

மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியில் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 300 வீடுகளை (காலி, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் தலா 100 வீடுகள்) கையளிக்கும் நிகழ்வும் அமைச்சரினால் இணையவழி தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

60,000 வீடுகளைக் கொண்ட இத்திட்டத்தில் 50,000வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பெருந்தோட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4000 வீடுகளில் மூன்றாம் கட்டச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பூரணப்படுத்தப்பட்ட 3300 வீடுகள் ஏலவே பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘மாதிரி கிராம வீட்டுத் திட்டம்’ மூலம் அநுராதபுரம் மற்றும் பதுளை மாவட்டங்களில் அமைக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் அடையாள நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, புத்தசாசன , சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, புத்தசாசன , சமய மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.