பரீட்சை நேரத்தில் கூட மின்வெட்டு தவிர்க்க முடியாதது : எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர!

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி பரீட்சை நேரத்தில் கூட மின்வெட்டை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்கான தொடர்ச்சியான மின்சார விநியோகத்துக்கு மேலதிகமாக 5 பில்லியன் ரூபா செலவாகும் என எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அந்தத் தொகையைச் செலுத்துவதற்கு சபைக்கு நிதி பலம் இல்லை எனவும் தெரிவித்தார்.

பணத்தைச் செலுத்தாமல் எரிபொருளை கடனாகப் பெற்றால் அது மீண்டும் எரிபொருள் வரிசையில் நிற்கும் யுகத்துக்கு வழிவகுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கும் வகையில் கட்டணத்தை உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் வரிசைகள் உருவாக்கப்படுவதை தடுக்கும் வகையில் திருத்தத்தை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Published from Blogger Prime Android App