உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்காக பல குறுக்கு வழிகளிலான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது : றிஷாட் பதியுதீன்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடு வதற்காக பல குறுக்கு வழிகளிலான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலான அம்பாறை மாவட்ட மக்கள் சந்திப்பு ஒலுவிலில் நேற்று மாலை (14) நடைபெற்றது. இங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றும் போது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும். இம்முறை சிறந்த சமூக அக்கறை கொண்ட , திறமையான வேட்பாளர்களை களமிறக்க உள்ளோம். அதனுடாக எமது மக்கள் சேவை முன்பு போன்று மிகச் சிறப்பாக பிரதேசங்களில் இடம்பெறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

இந்த தேர்தல் ஜனநாயக ரீதியிலே மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே நடைபெறுகின்றபொழுது அது நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியை சொல்லும். அந்த வகையிலே அரசாங்கம் எந்தவித தங்கு தடைகளையும் ஏற்படுத்தாமல் உரிய நேரத்திலே இந்த தேர்தலை நடாத்த வேண்டும்.

பல வகையான குறுக்கு வழிகளிலே இந்த தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காரணம் இந்த அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்து நிற்பதனால் இந்த தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாமல் தேர்தலை பிற் போடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

எனவே, தேர்தலை பிற்போடுவதிலிருந்து விடுபட்டு இந்த தேர்தலை உரிய நேரத்திலே நடாத்த வேண்டும் என்று நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.Published from Blogger Prime Android App