சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைத்தால்கூட இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது : அலி சப்ரி!

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக் கிடைத்தால்கூட, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளது.

அந்நாடு நேரடியாக ஐ.எம்.எப்.இற்கு இதனை அறிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்று நம்புகிறோம். எனவே, சிறந்த பெறுபேறு ஊடாக ஐ.எம்.எப்.உடன் எம்மால் பேச்சு நடத்த முடியும்.

எனினும், ஐ.எம்.எப். வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதியால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஆனால், நீண்ட காலமாக தீர்க்கமுடியாத பல தேவைகளை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை இதனால் நிறைவேற்ற முடியும் என நாம் நம்புகிறோம்.

நாம் படிப்படியாகத் தான் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியும். குறுகிய கால பிரசித்தமான தீர்மானங்களை எடுத்து, இந்த நாட்டை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதல்ல எமது முயற்சி. மாறாக நடைமுறைச்சாத்தியமான விடயங்களைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App