உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைச்சரவையில் எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை : பிரதமர் !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைச்சரவையில் எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

கட்டுப்பணம் செலுத்தல் பணியில் இருந்து விலகுமாறு சுற்றறிக்கை வெளியிட நான் ஆலோசனை வழங்கவில்லை. அரச நிர்வாக அமைச்சின் செயலாளரை பதவி நீக்க முடியாது என அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (17) செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்க வேண்டும். இருப்பினும் நாட்டின் நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும், அமைச்சரவைக்கும் உண்டு.நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கட்டுப்பணம் செலுத்தல் பணியில் இருந்து மாவட்ட செயலாளர்களை விலகுமாறு அமைச்சரவையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு நான் ஆலோசனை வழங்கவில்லை.வெளியிட்ட சுற்றறிக்கையை செயலாளர் அன்றைய தினமே மீளப் பெற்றுக்கொண்டார். தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு எதிர் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

அரச நிர்வாக அமைச்சின் செயலாளரை பதவி நீக்க முடியாது.எதிர்க்கட்சி தலைவர் காலையில் இருந்து இவ்விடயம் தொடர்பில் மாத்திரம் கருத்துரைக்கிறார்.தவறான கருத்துக்களை குறிப்பிட்டு நாட்டு மக்களை அவர் தவறாக வழிநடத்துகிறார்.

பேச்சளவில் மாத்திரம் ஜனநாயக கொள்கையை பின்பற்றும் எதிர்தரப்பினர் கடந்த கால சம்பவங்களை மீட்டிப்பார்க்க வேண்டும். நாட்டில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் முன்னிலையில் இருந்து செயற்பட்டவர்கள் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகவுள்ளார்கள் என்றார்.Published from Blogger Prime Android App