செய்திகள் புலத்தில்

தேர்தலில் யாரை தமிழர்கள் தேர்வு செய்ய வேண்டும் ? – பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் !

சிறிலங்காவின்; தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், வரும் தேர்தலில் தமிழ்தேசியத்தை முன்னெடுத்துச் செல்கின்றவர்களாக, மக்களை நேரடிப்போராட்டத்தில் ஈடுபடுத்தக்கூடிய தலைமை தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இக்கருத்தினை அவர் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில்,

சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில் கொள்கை முடிவுகளே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளில் எடுத்து வருகின்றது.
எம்மைப் பொறுத்தவரை சிறிலங்காவின்; தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. சிறிலங்காவின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பத்து வீதத்துக்கு குறைவானவர்களே தமிழர்கள் உள்ளனர். இதனால் சிறிலங்காவின் நாடாளுமன்றத்துக்கு சென்று எதனையும் சாதித்துவிடமுடியாது.

கடந்த காலங்களை எடுத்துப்பார்த்தால் 1972ம் ஆண்டு அரசியலைமைப்பு சட்டம் கூட தமிழ்மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டது. 1978ம ஆண்டிலும் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டது.

சிறிலங்காவின் அரசியல்வெளியில் என்பது தமிழர்களுக்கான பங்கெடுப்பு இடமில்லை. ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த வல்லுனர் குழுவின் அறிக்கையும் கூட ‘ தமிழ் மக்கள் தமது இன அடையாளத்தின் அடிப்படையில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாகப் புறந்தள்ளப் பட்டு வந்தமையே இனப்பிரச்சனையின் அடிப்படையாக இருந்துவந்த காரணத்தினால், இன்றும் தொடர்ந்து கொண்டு போகும் புறந்தள்ளல் வகையிலான கொள்கைகள் மிகவும் ஆபத்தானவை என சிறிலங்காவின் அரசியல் நீரோடையில் தமிழர்களின் பங்களிப்புக்கான காத்திரமான இடம்இல்லை தெரிவித்துள்ளது.

காரணம் சிறிலங்கா ஒரு பௌத்த இனவாத இறுகிய இனவாத கட்டமைப்பாகும். அதற்குள் தமிழர்களுக்கான அரசியல் வெளியே இல்லை. இதன் காரணமாகத்தான் ஆயுதப் போராட்டமே தொடங்கியது. அதனால்தான் நிகழ்வுபூர்வமான ஒர் அரசினை நிறுவினோம்.

அதேசமயம் சிறிலங்காவின் தேர்தல்களை நாம் பயன்படுத்த வேண்டும். எமது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அதனை ஒரு கருவியாக கையாளவேண்டும். இந்த தேர்தல்களில் பங்கெடுக்கின்ற தமிழர்கள் தமிழ்தேசியத்தை முன்னெடுத்துச் செல்கின்றவர்களாக இருக்க வேண்டும்.
மக்களை நேரடிப்போராட்டத்தில் ஈடுபடுத்தக்கூடிய தலைமையினைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

புலம்பெயர் தேசங்களில் நாம் பல இராஜதந்திரிகளைச் சந்திக்கும் போது, தாயக இருந்து வருகின்ற தலைவர்கள் ஒன்றைச் சொல்கின்றார்கள், நீங்கள் இன்னொன்றைச் சொல்கின்றீர்கள் என இராஜதந்திரிகள் கூறுகின்றார்கள். தமிழர்களுடைய அடிப்படைக் கோரிக்கைகள் பலவீனப்படுகின்றது.

தாயகத்தில் இருக்கின்ற தலைவர்கள் இனப்படுகொலை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு சிறிலங்காவை கொண்டு செல்வதற்கு வெளிப்படையாக ஈடுபாடுகாட்டவேண்டும். இதனைச் சொல்வதற்கும் சிறிலங்காவின் ஆறாவது திருத்தசட்டமோ, பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு தடையாக இல்லை. அதனை ஒரு சாட்டாக சொல்லமுடியாது. தமிழர்களுடைய அடிப்படை விடயங்களை சொல்லக்கூடிய தமிழ் தேசியத்தை முன்னெடுக்க கூடியவர்கள் தாயக மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என எதிர்பார்கின்றோம்.

1986ம் ஆண்டு திம்புவில் பேச்சுவர்த்ததை தொடங்கியத்தில் இருந்தே எங்களுடைய தேசிய இனப்பிரச்சனை கொழும்பு எல்லையைத் தாண்டிவிட்டது. கொழும்புடன் கதைத்து நாங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை. இந்த யதார்த்த்தினை தாயக தமிழ்அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கொழும்புடன் பேசத் தொடங்கினால், இன்று சர்வதேசமயப்பட்டுள்ள எமது பிரச்சனைக்கும் சர்வதேச ஆதரவுக்கு பின்னடைவாகும். பௌத்த இனவாத கட்டமைப்பான சிறிலங்காவின் நாம் கதைத்து ஒன்றினையும் பெறமுடியாது. திம்பு முதல் தாய்லாந்து ஜெனீவா என்று எமது பிரச்சனைகளை

சர்வதேமயப்படுத்திவிட்டுள்ள நிலையில், மீண்டும் கொழும்புக்குள் தமிழர் பிரச்சனையைக் தாயக தலைவர் கொண்டு செல்லக்கூடாது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்தார்.

மேலும் தமிழர் தாயகத்தின் தென்முனை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ள தொல்பொருள் செயலணி குறித்து கருத்தினை தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழர் தேசத்தை கூறுபோடுகின்ற ஒரு அரசியல் யுத்தி இதுவெனத் சுட்டிக்காட்டியுள்ளார்.

1948ம் ஆண்டு தென்தமிழீழத்தில் 1 வீதமாக இருந்த சிங்கள பரம்பல், இன்று 30 வீதமாகியுள்ளது. 1949ம் ஆண்டே டி.எஸ்.செனநாயக்கா சிங்கள மயமாக்கலைத் தொடங்கிவிட்டார். அதன் ஒரு தொடர்சியாகவே இன்றும் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் செயலணியை சிறிலங்கா அமைத்துள்ளது.

தமிழர் தேசத்தை கூறு போட்டு, தமிழர் தாயக அரசியலை பலவீனப்படுத்த முனைகின்ற சிறிலங்காவின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் நேரடி போராட்த்தில் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Related Posts