செய்திகள் முக்கிய செய்திகள்

வீடு – அங்கேயே அனுப்புங்கள் சுமந்திரனை ! பாராளுமன்றத்துக்கல்ல !!

ரஜனிகாந்தின் திரைப்படமொன்றுக்கான வெளிப்புறப் படப்பிடிப்பு. உடன் நடிக்க இருப்பவர் நடுத்தர வயதான துணை நடிகை. காட்சி எப்படி அமையப்போகிறது என்று ஏற்கெனவே விளக்கியாற்று. ஒரு கோவிலின் உள்ளேயிருந்து வெளியே வந்த ரஜனிகாந் எதிர்ப்படும் அந்த கதாபாத்திரத்திடம் கேட்டார் “அம்மா! உங்களுக்கு எத்தனை குழந்தைங்க ?” இதற்கு ” மூணு குழந்தைங்க” என்றார் அந்த துணை நடிகை. தொடர்ந்து சில வினாடிகள் உரிய வாறு கதைக்கேற்ற வகையில் காட்சி அமைந்தது. அதன் பின் அந்த துணை நடிகையிடம் வந்த இயக்குனர் “ஏம்மா! உனக்கு ரெண்டு குழந்தைங்கன்னு தானே சொல்லித்தந்தோம். ஏன் மூணுன்னு சொன்னே ?” என்று வினவினார். அதற்கு “எனக்கு உண்மையிலேயே மூணு குழந்தைங்க இருக்கிறாங்க சார். நீங்க சொல்லித் தந்தது நினைவில இருந்ததுதான்; ஆனா என்னமோ …….. அப்படிச் சொல்ல முடியல்லேங்க …… ? என தயக்கத்துடன் பதிலளித்தார் அந்த துணை நடிகை.

இயக்குனர் சொல்லிக் கொடுத்தது போல் இரண்டு குழந்தைகள் என்று பதில் சொல்லியிருந்தால் ஆண்டவன் சில வேளை இரண்டையும் மட்டும் தக்கவைத்துக்கொண்டு ஒன்றைத் திருப்பி எடுத்துக்கொள்ளக்கூடும் என மனைச்சஞ்சலத்துடனேயே வாழும் நிலை ஏற்பட்டிருக்கும்.
இதுதான் ஒருதாயின் – பெற்றோரின் மனநிலை பிள்ளைகளின் தொகையைக் கூடக் குறைத்துச் சொல்ல முடியாது என்றால் தம்மால் இழக்கப்பட்ட பிள்ளையை அடுத்தவன் அவமதிப்பது என்றால் எவ்வளவு கோபம் வரும்? இதுதான் எமது மாவீரர்களின் பெற்றோரின் நிலை.

தங்களின் பிள்ளையை ஒருவன் பயங்கரவாதி என்று சொன்னால் சாதாரணமான காலமென்றால் செருப்புக் கழட்டி அடித்திருப்பார்கள்.
இவ்வாறு சொன்ன இனத்துரோகி சுமார் இருபது சிறப்பு அதிரடிப்படையினருடன் உலா வருகையில் என்ன செய்யமுடியும்? இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வாக்குச் சீட்டினை இத் துரோகிக்கு எதிராக பயன் படுத்த முடியும். கோத்தபாய மீது தமக்குள்ள கோபத்தை எப்படி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குச் சீட்டாகப் பயன்படுத்த முடிந்ததோ அவ்வாறே பயன்படுத்த வேண்டும்.

`அறிவாற்றல்` என்ற சொற்பதம் மூலம் சுமந்திரனை விட்டால் வேறு நாதியில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முனைகின்றனர். தனியே உயர் கல்வியென்ற பதம் மட்டும் மக்களுக்குத் தலைமை தாங்க போதுமானது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றனர் இவர்கள்.
ஒக்ஸ்போர்ட்டில் படித்த பண்டாரநாயக்கத்தான் தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டுவந்தார். காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகிகளை குண்டர்கள் மூலம் தாக்குவித்தார்.தலையிலிருந்து இரத்தம் வழிய பாராளுமன்றத்தினுள் நுழைந்த தமிழ்ப் பிரதிநிதிகளை விழுப்புண்ணடைந்த வீரர்கள் வருகிறார்கள் என எள்ளி நகையாடினார்.
2009 நடைபெற்ற மாபெரும் இனப்படுகொலையின் பின்னர் ஜெனீவாவில் நீதிகேட்டு தமிழினம் நின்றது. அப்போது “எங்களால் நாடுகளிடையே சில பரப்புரைகளைச் செய்யமுடியும். ஆனால் நாம் அவ்வாறு செய்யமாட்டோம் ஸ்ரீ லங்கா எமது நாடு“ என நமோ நமோ மாதா அப்பே சிறிலங்கா என்று பாடாத குறையாக கூறியவர்தான் ஜனாதிபதி சட்டத்தரணி ஆபிரகாம் மதியாபாரணம் சுமந்திரன். கூட்டமைப்புக்கு வாக்களிக்க நினைப்போர் வீட்டை இரு வழிகளில் சிந்திக்க வேண்டும். முதலாவது வாக்களிக்க வேண்டிய சின்னம் என்ற வகையில்; அடுத்தது சுமந்திரனை அவரது சொந்த வீட்டுக்கே அனுப்பி வைக்க வேண்டும். பாராளுமன்றத்துக்கல்ல. அதற்கேற்ற வகையில் தமது விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டும்.

Related Posts