செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ் தேசியம் தோற்றதா? பிள்ளையானால் என்ன செய்ய முடியும்??

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியம் தோற்றுவிட்டது என்று தமிழ் தேசிய இனத்தில் பிறந்த சிலர் மட்டக்களப்பில் கொக்கரித்து திரிகின்றனர்.

உண்மையில் தமிழ் தேசியம் தோற்றுப்போனதா? உலக வரலாற்றில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கீழடி வரலாற்றை கொண்ட ஒரு தேசிய இனம் தோற்றுப்போக முடியாத பல்லாயிரக்கணக்கான வரலாற்றை இந்த பூமி பந்தில் உருவாக்கி உள்ளது.
தமிழ் தேசியத்தை அழிப்பதற்கு உலகில் யாரும் இன்னும் பிறப்பெடுக்கவில்லை. அது உலகம் அழிந்தாலும் தமிழ் தேசியம் அழியாது வாழும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியின் தோல்விக்கு காரணம் கூட அவர்கள் தமிழ் தேசியக் கோட்பாட்டில் இருந்து விலகி அரசுடன் இணைந்து இணக்க அரசியல் செய்து அதன் ஊடாக தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்காததன் விளைவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த பின்னடைவுக்கு காரணம்.

தமிழ் தேசியம் என்பதை பெயரில் மட்டும் வைத்துக் கொண்டு தமிழ் தேசியக் கொள்கைக்கு மாறாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது.

தாயகம், தேசியம், தன்னாட்சி, கொள்கைகள் அனைத்தும் எழுத்தில் மட்டும் இருந்ததே தவிர செயற்பாடுகள் அனைத்தும் அதற்கு எதிராக இருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2009 ஆண்டிற்கு பின்னர் அரசின் கைக் கூலிகளாக மாறிப்போனார்கள் அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம் அரசியல் தீர்வை பெறவே அரசுடன் இணைந்து செயற்படுகிறோம் என்று.

அரசுக்கு எதிரான போராட்ட சக்திகளை அழித்தது மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் செய்த நுணுக்கமான ராஜதந்திர செயற்பாடுகள்.

2009 ற்கு பின்னர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூடிய அரசியல் தீர்வுக்கான ஒரு வெகுஜன போராட்டம் ஒன்றை கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பால் ஒருங்கிணைத்து நடாத்த முடியவில்லை அவர்கள் முயற்சிக்கவும் இல்லை.

மாறாக இலங்கை அரசுக்கு எதிரான மனநிலையினை கொண்டவர்களையும் எழுச்சியும் புரட்சியும் செய்யக் கூடாது என்பதற்காக பல இளைஞர்கள் போராட்ட களத்தில் இருந்தவர்கள் தமிழ் உணர்வாளர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒதுக்கியே வைத்தனர்.

இதன் விளைவு இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது விரக்தி ஏற்பட்டது.

போராட்டமும் இன்றி தீர்வும் இன்றி பதினொரு வருடங்களை கழித்ததும் இல்லாமல் மாற்று சமூகத்திடம் அதிகாரங்கள் வழங்கப்பட்டு தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டதால் கிழக்கு மாகாண இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது ஏற்பட்ட ஆதங்கமும் அதனை கேள்வி கேட்ட இளைஞர்களை எடுத்தெறிந்து பேசி கட்சியில் இருந்து ஒதுக்கியதன் விளைவு ஆயுத குழுவாக இருந்தாலும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு கட்சியை உருவாக்க வேண்டும் அதில் நாம் இணைந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவானது.

இந்த வாய்ப்பை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் சரியாக பயன்படுத்தி கொண்டனர்.

அதாவது 2009 யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் இளைஞர்கள் தங்களுக்கான அரசியல் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உரிமை கோரி நின்றனர்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அகிம்சை ரீதியாக போராடி உரிமைகளை பெற்று தரும் என எதிர் பார்த்து நின்றார்கள்.

தமிழ் இளைஞர்கள் பலர் தங்களுக்கான அரசியல் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உரிமை கோரி நின்றனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் அந்த இளைஞர்களை ஒதுக்கியே வைத்தனர். இளைஞர்களை ஒருங்கிணைக்கவோ இளைஞர் தலைமைகளை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. இளைஞர்கள் ஒருங்கிணைந்தால் தங்களது பதவிகள் பறிபோகும் என அஞ்சினர் அவ்வாறு அஞ்சியவர்கள் கடைசியில் கட்சியை அழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விரக்தியில் இருந்த இளைஞர்களுக்கு அரசியல் களத்தை உருவாக்கி ஒரு புரட்சி கர அமைப்பாக தன்னை அடையாளப்படுத்தி மட்டக்களப்பு இளைஞர்களை உள்வாங்கும் முயற்சியில் அதிதீவிரமாக ஈடுபட்டது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி. இதற்காக வெளிநாட்டு உள்நாட்டு புலனாய்வு முகவர்கள் மிகவும் சூட்சுமமாக வீயூகங்களை அமைத்து கொடுத்தனர். மிக முக்கியமாக வேட்பாளர் தெரிவில் இந்த வீயூகம் சிறப்பாக இருந்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வேட்பாளர்கள் தான் அவர்களின் வாக்கு வங்கி உயரக் காரணம். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிக்கு ஏற்படுத்தி கொடுத்த வெற்றி இதற்கான பொறுப்பை ஏற்று முதலில் கட்சியின் செயலாளர் பதவி விலக வேண்டும்.

கட்சி மறு சீரமைக்கப்பட வேண்டும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட எழுச்சியும் புரட்சியும் மிக்க இளைஞர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்டு பல போராட்ட களங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு திறக்கவேண்டும். இளைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வுக்கான அகிம்சை ரீதியான போராட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

Related Posts