செய்திகள்

வாகனேரி தபால் அலுவலகத்தை காணவில்லை? பொதுமக்கள் ஆதங்கம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி கிராமத்தில் பல வருடங்களுக்கு முன் இருந்த தபால் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாக பொதுமக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் வாகனேரியில் இருந்த தபால் அலுவலகத்தை வாழைச்சேனை காவத்தமுனை பிரதேசத்திற்கு இடமாற்றி இருந்தனர். ஆனால் யுத்தம் நிறைவடைந்து பதினொரு ஆண்டுகளாகியும் குறித்த தபாலகத்தை வாகனேரிக்கு மாற்றம் செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

தற்போது அந்த தபால் அலுவலகம் வாழைச்சேனை காவத்தமுனை பிரதேசத்தில் வாகனேரி அஞ்சல் அலுவலகம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. அதாவது வாகனேரி அஞ்சல் அலுவலகம் அதே பெயருடன் காவத்தமுனையில் இயங்கி வருகிறது.

வாகனேரி,புனானை கிராம மக்களுக்கு இருந்த ஒரே ஒரு அஞ்சல் அலுவலகத்தை காவத்தமுனையில் இன்று வரை வைத்திருப்பதற்கு யார் காரணம்.

இதனால் வாகனேரி, புனானை கிராமத்தில் உள்ள மக்கள் சுமார் 15 கிலோமீட்டர் அஞ்சல் அலுவலக சேவையை பெறுவதற்காக தினமும் வந்து செல்கின்றனர்.

மாதாந்த முதியோர் கொடுப்பனவை பெறுவதற்காக சுமார் 75 ற்கு மேற்பட்ட முதியவர்கள் வாழைச்சேனை காவத்தமுனை அஞ்சல் அலுவலகத்திற்கு மாதம் மாதம் வந்து செல்லவேண்டியுள்ளது. என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தங்களது கிராமத்திற்கான அஞ்சல் அலுவலகத்தை மீண்டும் தங்கள் கிராமத்தில் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து பல தடவைகள் சுட்டி காட்டியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Related Posts