செய்திகள் முக்கிய செய்திகள்

தியாகி திலீபனின் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – யாழில் அமைக்கப்பட்ட உருவப்படங்கள் அகற்றப்பட்டன

யாழ்ப்பாணம் – நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது.

இந்த நிலையில் நீதிமன்றத் தடையை நேற்றுப் பெற்றிருந்த யாழ்ப்பாணம் பொலிஸார், இரவோடு இரவாக நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகளை அகற்றியுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இடத்தையும் கோப்பாய் பொலிஸார் அகற்றியுள்ளனர்.

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று (திங்கட்கிழமை) காலை நடந்த வழக்கு விசாரணையின்போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

பொலிஸாரினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து, திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதி தர வேண்டும் என்று நீதிமன்றில் கோரியபோதிலும் தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.

தியாக தீபம் திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

எனினும் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், அவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட பனிரெண்டாம் நாளான செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி வீர மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts