சிறப்புக் கட்டுரை முக்கிய செய்திகள்

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிவ விரதமாகும்.இவ் சிவராத்திரி விரதம் வருடம் தோறும் வரும் கிருஸ்ண பட்ச(தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் இடம்பெறும்.
சிவராத்திரி விரதம் நாளை 21/02/2020 அன்று வெள்ளிக்கிழமை அனுஸ்ரிக்கப்படுகின்றது.
நாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.

சிவ ராத்திரியின் புராண கதை

பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார்.

இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிகை சிவனை வணங்கி வேண்டிக்கொண்டார்.
தான் பூஜித்த இந்த இரவு ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அப்படிப்பட்ட உன்னத நாள் தான் தேவர்களும், மனிதர்களும் இன்றும் சிவ ராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

நான்கு ஜாமங்களில் செய்ய வேண்டிய பூஜை

மஹா சிவராத்திரி என்பது சிவனை நினைத்து அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து நான்கு ஜாமங்களிலும் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, இறைவனின் அருளைப் பெறக்கூடிய அற்புதமான திருநாள். இந்த நாளில் நாம் நான்கு ஜாமங்களில் செய்ய வேண்டிய அபிஷேக அர்ச்சனை, ஆராதனை என்ன என்றும், செய்யக்கூடாதவை போன்ற முக்கிய விஷயங்கள் என்ன என்பதையும் பார்ப்போம்.

முதல் ஜாமம் செய்ய வேண்டியது:
பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.

சிவராத்திரி பூஜைகள்
இரண்டாம் ஜாமம்:
பால், தயிர், நெய் கலந்த ரவை அதனுடன் சர்க்கரை கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும். பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்த வேண்டும். பின்னர், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை, பாயசம் நிவேதனம் செய்யவும்.

மூன்றாம் ஜாமம்:
தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சாத்துதல், மல்லிகைப் பூக்களால் அலங்காரம், வில்வ இலைகளால் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம் செய்யவும்.

நான்காம் ஜாமம்:
கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்தல், நந்தியா வட்டை மலர் சாற்றி வழிபடுதல், அல்லி, நீலோற்பலம், நந்தியாவர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், செய்யலாம்.

செய்யக்கூடாதவை:

►பகலில் தூங்கக் கூடாது. சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, கைபேசிகளில் விளையாடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.

►சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையிடன் இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.

தன்னை அறியாமல் மோட்சம் பெற்ற வேடன் பற்றிய புராணக்கதை ஒன்று கூறப்படுகின்றது.

ஒரு வேடன் காட்டில் வேட்டையாட சென்றிருந்தான். அன்றைய தினம் பல முயற்சிகள் செய்தும், பல இடங்களில் அலைந்து திரிந்தும் எந்த ஒரு விலங்கையும் வேட்டையாட முடியவில்லை. சூரியன் மறையக்கூடிய நேரம் வந்தது.
அப்போது ஒரு புலி அவனருகே வந்துவிட்டது. பயந்து போன அவர் அவனருகே இருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியோ அவனை திண்றுவிட வேண்டும் என்ற ஆவலில் வேடன் இருந்த வில்வ மரத்தை சுற்றி சுற்றி வந்தது.

சூரியன் மறைந்து இருண்டது. ஆனால் புலி மரத்தை விட்டு நகலவில்லை. தூக்கம் காரணமாக கண் அசர்ந்து கீழே விழுந்துவிட்டால், புலிக்கு இறையாகி விடுவோமே என்ற பயத்தில், மரத்தில் இருந்த ஒவ்வொரு இலையாக பிடுங்கி கீழே போட்டுக்கொண்டே இருந்தான்.
அது அவனுக்கே தெரியாமல் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது அந்த வில்வ இலைகள் விழுந்து அது வில்வ அர்ச்சனையாக மாறியிருந்தது.

சிவ ராத்திரியாக அமைந்திருந்த அன்றைய தினம் இரவு முழுவதும் அவனுக்கு தெரியாமலேயே, கொஞ்சம் கூட தூங்காமல் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்ததால், அந்த வேடனுக்கு ஈசன் முக்தி அளித்து மோட்சத்தை அருளினார் என்கிறது
.
இந்த காரணத்தால் மகா சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை போக்கி மோட்சம் எனும் நல்லருளை வழங்குவார்.

Related Posts