அம்பாறை செய்திகள்

மட்டக்களப்பில் கொரோனா அம்பாறையில் கருணா!

அன்று தமிழர்களின் வீரம்செறிந்த போராட்டத்தை சிதைத்தவர்கள் இன்று தமிழர்களின் அரசியலையும் சீரழிக்கமுனைந்துள்ளனர். மட்டக்களப்பில் கொரோனா அம்பாறையில் கருணாவா?

இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவுப்பிரதேச தலைவரும் காரைதீவுப் பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கேள்வியெழுப்பினார்.

இ.த.அரசுக்கட்சி ஆதரவாளர்களுடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(15)மாலை கட்சியின் மாவட்ட காரைதீவு அலுவலகத்தில் நடைபெற்றபோது பிரதான உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது இ.த.அரசுக்கட்சி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட விண்ணப்பித்தவர்களும் கலந்துகொண்டார்கள்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்..
வடக்கு கிழக்கு மக்களின் நிலவிடுதலைக்காகவும் இன விடுதலைக்காகவும் கடந்த 70வருடகாலமாக தந்தை செல்வா வழியில் நேர்மையாகவும் நிதானமாகவும் பயணித்துவரும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்களுக்காக தேர்தலையொட்டி நடாத்தப்படும் ஆரம்பக்கூட்டம் இது.
எதிர்வரும் தேர்தல் மதவாதம் இனவாதம் நிறைந்ததாக இருக்கப் போகின்றது. இன்னும் வேட்பாளர்கள் தெரிவு நிறைவடையவில்லை. அதற்கிடையில் தொப்பி பிரட்டுபவர்களும் கட்சிமாறுபவர்களும் வலம்வருவார்கள். அதையிட்டு நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.

நீண்டகால வரலாற்றைக்கொண்டது எமது கட்சி. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதான கட்சி என்பதை அனைவரும் அறிவார்கள். இன்று அக்கட்சி பல்வேறு விமர்சனங்களுக்கு முகம்கொடுத்துவருகிறது. ஏனெனில் அதில் ஜனநாயகத்தன்மை மலிந்துள்ளதே காரணம்.
ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும். இந்த விமர்சனம்செய்யும் உரிமையை அந்தக்களத்தை ஏற்படுத்தியதும் எமது கட்சிதான். வேறு கட்சிகளிடத்தில் இவ்வாறு விமர்சனம் செய்யவோ கேள்வி கேட்கவோ மாட்டார்கள்.

த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களித்தோம். அவர்கள் என்னசெய்தார்கள்? என்று கேட்கிறார்கள். அதே போல பேரினவாதக் கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் அக்கட்சித்தலைமையிடம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கமுடியுமா?

உதாரணமாக கல்முனை வடக்கு பிரதேசசெயலகவிடயத்தைப் பார்ப்போம். த.தே.கூட்டமைப்பு செய்யவில்லை என்று கூக்குரலிடுகிறீர்கள். சரி ஒருவகையில் நியாயம் என்போம்.
அரசதரப்பினர் வந்து 3வாரங்களுள் தீர்ப்போம் ஆட்சிவந்ததும் 3நாட்களுள் தீர்ப்போம் என்றனர். அவர்களிடம் அதைஏன் இன்னும்செய்யவில்லை ? என்றுகேட்கத்திராணியற்றவர்களாக எம்மவர்கள் உள்ளனர்.

மொட்டு கதிரை என்றுகாரியாலயம் திறக்கிறார்கள். கொடுத்தகாசிற்கு அவ்வளவுதான். மறுநாள் காரியாலயம்இழுத்துமூடப்படும்.அவர்களுக்கு இனத்தைப்பற்றியோ மண்ணைப்பற்றியோ சிந்தனையில்லை. பணத்தின்பின்னால் யார் கூப்பிட்டாலும் போவார்கள்.பணம்மட்டுமே அவர்களதுஇலக்கு.
ஆனால் த.தே.கூட்டமைப்பு அப்படி சலுகைக்கும் பணத்திற்கும் சோரம் போனகட்சியல்ல. எமது கட்சிமக்களை ஒருபோதும் ஏமாற்றவில்லை. தமிழர்களின் அடையாளம் அது.தமிழர்களின்இருப்பைத் தக்கவைக்கும் ஒரே கட்சி எமதுகட்சிதான் என்பதை அனைவருமறிவோம்.

தமிழரசுக்கட்சி இல்லாவிட்டால் சிவி.விக்னேஸ்வரனின்நாமமே உலகிற்கு தெரியாமலிருந்திருக்கும். எனவே இக்கட்சிமூலம் பிரபலமானவர்கள்தான் அதிகம்.
ஒருசிலரின் நயவஞ்சகத்தன்மைக்காக ஏமாற்றும் நரித்தந்திரத்திற்காக ஒட்டுமொத்த கட்சியை யாரும் வெறுக்கக்கூடாது. வஞ்சிக்கக்கூடாது. எமது தலைமைகள் திடகாத்திரமாகஉள்ளது. அவர்கள்வழிநடாத்தலில் நாம் துணிந்து பயணிப்போம்.
அம்பாறை மாவட்டத்தில்போட்டியிட எமதுகட்சிசார்பில் 11பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் யார்பொருத்தமானவர்கள் என்பதை எமதுதலைமைகள் தீர்மானிக்கும். அதுவரை நாம்பொறுமையாயிருப்போம். அதன்பின்னர் எமது பரப்புரைகளை நாம் விஸ்தரிப்போம்.

சிலர் தேர்தல்காலத்தில்எங்கிருந்தோ வருவார்கள் .பிரதேசசெயலகத்தை தரமுயர்த்துவோம் பெற்றோல்செற் போட்டுத்தருவோம் ஆஸ்பத்திரியைதரமுயர்த்துவோம் என்பார்கள். இல்லாதபொய்களை வைத்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவார்கள். ஆனால் எதுவுமே நடந்ததில்லை. அதன்பின்னர் இப்பக்கமேவரமாட்டார்கள். அதையிட்டுயாரும் கேள்வியெழுப்புவதில்லை.

விடுதலைப்புலியை ஒழித்த எமக்கு கொரோனாவை ஒழிப்பதென்பது சுலபம் என்று கேவலமாக பேசுகிறார் ஒருவர். எவ்வாறெல்லாம் எம்மை இழிவுபடுத்தலாமென்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.
எனவே வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் ஏகோபித்த குரலான த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களித்துஎமதுஇருப்பை நிலைநாட்ட இப்போதிருந்தே தயாராகவேண்டும். அதற்காக எமது ஆதரவாளர்கள் முழுமூச்சுடன்செயற்படவேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து வெளியிட்டார்.

Related Posts