செய்திகள் புலனாய்வுச் செய்திகள்

கதிரை மட்டுமே இலக்கு! பிள்ளையானிடம் மண்டியிட்டார் மங்களா

தமிழ் அரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என இறுதிவரை நம்ப வைக்கபட்டு ஏமாற்றப்பட்ட நிலையில், மங்களேஸ்வரி சுகிர்தன் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் தேர்தலில் களமிறங்க வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

பட்டிருப்பு தொகுதியை சேர்ந்த சட்டத்தரணி மங்களேஸ்வரி சுகிர்தன், இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரது விண்ணப்ப கடிதத்தை கட்சி கேட்டுப் பெற்றுக் கொண்டிருந்தது.

பட்டிருப்பு தொகுதியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “பிரியாணி வாங்கிக் கொடுத்து ஆசனம் பெற்றார்“ என அரசியலரங்கில் நகைச்சுவையாக பேசப்படும் விவகாரமான- சாணக்கிய ரகுல் என்பவர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. கடந்த தேர்தலில் ஹிஸ்புல்லாவுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்த அவருக்கு, தமிழ் அரசு கட்சி ஆசனம் வழங்கியது கிழக்கில் பேரதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பட்டிருப்பு வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட, தமிழ் அரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மங்களேஸ்வரி, இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் களமிறங்க வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.

அவர் கையெழுத்திட்டதை அறிந்ததும், தமிழ் அரசு கட்சியின் கிழக்கு பிரமுகர்கள் பலர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

“எனக்கு வேட்புமனு வழங்கப்படுமென கூறி, பின்னர் ஏமாற்றப்பட்டது. எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காததால் இன்னொரு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறேன். தேர்தலின் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் நாம் இணைந்து பணியாற்றுவதையோ, நான் தமிழ் அரசு கட்சிக்கு வருவதை பற்றியோ யோசிக்கலாம். அதற்கு கட்சியின் விதிகள் இடையூறாக இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், கடந்தமுறை மஹிந்த-ஹிஸ்புல்லா முகாமில் போட்டியிட்ட சாணக்கியன் இம்முறை தமிழ் அரசு கட்சி வேட்பாளர்தானே“ என பதிலளித்ததாக, கிழக்கு தமிழ் அரசு கட்சி வட்டாரங்களிற்குள் சுவாரஸ்ய பேச்சு நிலவுகிறது.

Related Posts