செய்திகள் புலனாய்வுச் செய்திகள்

கோத்தாவின் உத்தரவை மீறிய மட்டக்களப்பில் சமூர்த்தி வங்கி ஏழை மக்களிடம் கடன் அறவீடு!

ஜனாதிபதியின் உத்தரவை மீறி கடன் அறவீடு செய்த சமூர்த்தி வங்கியால் பொதுமக்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இருதயபுரம் சமூர்த்தி வங்கியில் சமுர்த்தி கொடுப்பனவை பெறச் சென்ற குடும்பங்களிடம் இருந்து கடன்களை அறவீடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கொரோணா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு நாடுபூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டு வரும் நிலையில் இலங்கை பூராவும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கௌரவ ஜனாதிபதி அவர்கள் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன் தொகைக்கான மாதாந்த அறவீடுகளை ஆறுமாதம் கழித்து அறவீடு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு வட்டி அற்ற பத்தாயிரம் ரூபாய் கடன் வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்நிலையில் சமுர்த்தி வங்கி கொடுப்பனவை பெற்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யலாம் என்ற எதிர்பார்ப்புடன் சென்ற பல ஏழை குடும்பங்களிடம் இருந்து மட்டக்களப்பு இருதயபுரம் சமூர்த்தி வங்கி முகாமையாளர் கடன் அறவீடு செய்தமை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூர்த்தி வங்கியில் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள வரிசையில் முன்டியடித்து சென்ற போதும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணத்தில் இருந்து கடன்களை அறவீடு செய்து விட்டு மீதி பணத்தையே அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதனால் ஜனாதிபதியின் கதையை கேட்டு சென்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகள் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களிடம் இருந்து கடந்த காலங்களில் சேமிப்பு பணங்களை அறவீடு செய்தனர் இதில் அதி கூடிய தொகை பணத்தை சேமிப்பு பணமாக மட்டக்களப்பு சமூர்த்தி திணைக்களம் வைப்பில் வைத்துள்ளதாக கூப்படும் நிலையில். இவ்வாறான அவசர கால நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாது தொழில்களை இழந்து நிற்கும் போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அந்த மக்களுக்கு இந்த பணம் பயன்படவில்லை என்றால் வேறு எப்போது இந்த சமூர்த்தி சேமிப்பு பணம் பொதுமக்களுக்கு பயன் படப்போகிறது?

Related Posts