செய்திகள்

மட்டக்களப்பில் மாநகர சபை வடிகான் துப்பரவு பணிகள் முன்னெடுப்பு!

மழைகாலங்களில் ஏற்படுகின்ற வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு எதுவாகவுள்ள இயற்கை நீரோட்ட வடிகான்களை துப்பரவு செய்து அவற்றை சீரமைக்கும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது இராணுவத்தின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளது.
மட்டக்களப்பு நகர எல்லைக்குட்பட்ட பல கிராமங்களில் இயற்கை நீரோட்டப்பாதைகள் சில பொதுநபர்களால் அடாத்தாக படிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருந்தமையாலும், வடிகான்கள் தூர்ந்து போயிருந்தமையாலும் மட்டக்களப்பு நகரானது ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி வருகின்றது.

இவ் அனர்த்ததினைக் குறைக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வடிகான்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தற்கால நிதிநிலமைகளைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக இராணுவத்தின் உதவியுடன் பிரதான வடிகான்களை உடனடியாக துப்பரவு செய்து தருவதாக ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

இதற்கமைய இன்று (02.06.2020) ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, இராணுவ உத்தியோகத்தர் கேர்ணல் சரத் குணசேகர, ஆளுநரின் ஊடக செயலாளர் ஆர்.டி.மதுசங்க ஆகியோர் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்காக மாநகர முதல்வர் தலைமையில் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

மேற்படிக் கள விஜயத்தின் போது மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், அனர்த்த முகாமைத்துவ குழுவின் தலைவர் த. இராஜேந்திரன், மாநகர சபை உறுப்பினர் க.ரகுநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts