சிறப்புக் கட்டுரை முக்கிய செய்திகள்

பல்கலை. உண்ணா விரதிகளைக் காப்பாற்றிய புலிகள்!

தயாளன்
கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது! (10)
***
புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள், உடன்பாடுகள் மட்டு. சிறையில் இருந்து தப்பித்தல் தொடர்பான விடயம் கடந்த தொடரில் வெளியாகியது. அதன் பின்னர் நடந்த விடயங்ளின் தொடர்ச்சி இது.
அடுத்த முறுகல் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதம் தொடர்பானது. 1983 இனக்கலவரச் சூழ் நிலைகளுக்குப் பின் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் தமிழ் பேசும் மாணவர்களை யாழ்ப்பாணம்,மட்டக்களப்புப் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இது நடத்தப்பட்டது. முதலில் சுழற்சி முறையில் என ஆரம்பித்துப் பின்னர் சாகும்வரை உண்ணாவிரதம் என மாற்றப்பட்டது.இந்த முடிவை எடுக்கும் முன்னரே இதை ஒழுங்கு படுத்தியவர்களிடம் ஜே.ஆர் இதற்கெல்லாம் மசியக்கூடிய ஆள் அல்ல. சாகும் வரை உண்ணாவிரதம் என்ற கட்டத்துக்குப் போகாதீர்கள் என அறிவுறுத்தினர் புலிகள். அத்துடன் தமது நிலைப்பாட்டைத் துண்டுப் பிரசுரம் மூலம் வெளியிட்டனர். ஆனால் ஏனைய இயக்கங்கள் மாணவரை உசுப்பி விட்டன. இந்த உண்ணா விரதிகளில் நான்கு மாணவிகளும் அடங்குவர். நாட்செல்ல இந்த மாணவிகளில் ஒருவரான லலிதா என்பவருக்கு விக்கல் ஏற்பட்டது.
அப்போதுதான் சூழ்நிலையின் விபரீதம் புரிந்தது. கண்ணீருடன் உண்ணாவிரதிகளின் பெற்றோர், உறவினர் சூழ இருந்தனர். முடிவெடுப்பதில் சிக்கல். ஏனெனில் இயக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட இன்னொருவரின் விரல்களையும் இரவல் கேட்கவேண்டும் .ஆனாலும் உண்ணாவிரதிகளைக் காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தனர் புலிகள். டெலோவைக் கேட்டனர். அவர்கள் சம்மதித்தனர், புளொட், ஈ,பி .ஆர்.எல். எவ் வில் முடிவெடுக்கக் கூடியவர்களைக் காணவில்லை.அவர்களோடு தொடர்பு கொண்டு கேட்டால் சித்தாந்த விளக்கம் அளிப்பர். அது முடிய விடிந்து விடும். இங்கே ஆள் முடிந்து விடும். சில்லறை இயக்கங்களைக் கணக்கில் எடுக்க முடியாது. எனவே நடப்பது நடக்கட்டும் என முடிவெடுத்து அவர்களைக் கொண்டு செல்ல முயற்சித்தனர். இவர்களில் சிலர் தயங்குவதைக் கண்ட சுகந்தன் (ரவிசேகரம் ) கண்ணீருடன் கையெடுத்துக் கெஞ்சிக் கூப்பிட்டு அனைவரையும் ஒரு வேனில் ஏறவைத்தார்.
அடுத்த நாள் பிரச்சினை ஆரம்பமாகிற்று. இதனைக் கண்டித்து ஈ.பி.ஆர்.எல்.எப் , புளொட் சுவரொட்டிகளை ஒட்டின. புலிகளின் பிரமுகர்களைக் கண்டு ” எமது தோழியர் இருவர் இதில் இருக்கின்றனர்.அவர்களை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும்“ என்றனர் ஈ.பி.ஆர்.எல். எவ் வினர். அக்காலத்தில் இராணுவம்,பொலிஸ் எல்லா இடங்களுக்கும் சென்றுவரக் கூடிய சூழல் இருந்தது . இதனைக் குறிப்பிட்ட புலிகள் ” நாங்கள் அவர்களை வைத்திருக்குமிடம் வெளியே தெரிந்தால் பிரச்சினையாகிவிடும். எனவே அவர்களை நாம் தமிழகத்தில் ஒப்படைக்கிறோம்” என்றனர். அதனை ஈ.பி.ஆர்.எல்.எவ் . வினர் ஏற்கவில்லை. முரண்பாடு தோன்றியது. அடுத்த நாளும் இதே நிலைதான். எதற்கும் பொறுமை இழக்காத சந்தோஷமும் அதனை இழந்து விட்டார் . ” நீங்கள் செய்வதைச் செய்யுங்கோடா ” என்று கூறி விட்டார் . பத்திரமாக அனைவரும் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டனர் .

அவர்கள் சிகிச்சை முடிந்து ஓரளவு குணமானபின் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் இருதோழியரையும் அவர்களிடமே ஒப்படைக்குமாறு பிரபாகரன் சங்கரிடம் கூறினார். இந்த சங்கர் (சொர்ணலிங்கம்) பின்னர் புலிகளின் விமானப் படைத் தளபதியாக இருந்தவர். தமிழ் தகவல் மையம் (tamil information centre) என்று ஒரு செய்தி நிறுவனம் அப்போது சென்னையில் இருந்தது. எல்லா இயக்கத்தவரும் இந்த நிலையத்துக்குச் செய்தி வழங்குவர். மாநிலச் செய்திகளில் இந்த நிறுவனத்தை ஆதாரம் காட்டி இலங்கைச் செய்திகளைக் குறிப்பிடுவதுண்டு. பிரபலமான எல்லா இயக்கங்களும் தமது சார்பில் குறிப்பிட்ட ஒரு சிலரையே இங்கு அனுப்புவது வழக்கமாயிருந்தது. புலிகள் சார்பில் சங்கரே செல்வார். அவருக்கு ஈபி.ஆர்.எல்.எப் சார்பில் செய்தி கொடுக்க வருபவரைத் தெரிந்திருந்தது. அவருடன் உரையாடுவது வழக்கமாயிருந்தது. அந்த நம்பிக்கையில் ஈ.பி.ஆர்.எல். எவ் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு அறிமுகமானவரே இருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் வுடன் போக மறுத்த தோழிகள்!
” எங்கிருந்து வருகிறீர்கள்? ” – இதுதான் முதல் கேள்வி. சங்கருக்கு ஆச்சரியம். தினந்தோறும் ஊடகமையத்தில் கண்டு உரையாடுபவர் இப்படிக்கேட்கிறாரே என்று. பொறுமையுடன் ” ரைகேர்ஸ்ஸில் இருந்து ” எனப் பதிலளித்தார். அடுத்த கேள்வி ” எந்த ரைகேர்ஸ்ஸில் இருந்து” – பொறுமையிழந்து விட்டார் சங்கர். அந்தக் காலத்தில் புளொட்டும் தாங்களே உண்மையான ரைகேர்ஸ் என்று சொல்லிக்கொண்டு இருந்தது. எனவே சீண்ட வேண்டுமென்றே அந்தத் தோழர் இப்படிக் கேட்டார். ” எந்த இயக்கத்துக்கு ரைகேர்ஸ் என்று கூற உரிமை இருக்கிறதோ அதிலிருந்துதான் வருகிறேன்” என்றார் சங்கர். தொடர்ந்தும் இடக்குமுடக்கான கேள்விகள் – ஆதலால் பதில்களும் அவ்வாறே சொல்ல வேண்டியிருந்தது. மொத்தத்தில் தோழியரை ஒப்படைப்பது பற்றித் தீர்மானமெடுக்க முடியவில்லை. சங்கர் பிரபாகரனிடம் வந்து நடந்த விட யத்தைச் சொன்னார். இந்த விடயம் அந்த தோழியரின் காதுக்கும் போயிற்று. ” எங்களை ஒப்படைப்பதற்காகச் சென்ற சங்கர் அண்ணாவிடம் எங்களின் உடல் நிலை குறித்தே முதலில் அவர்கள் விசாரித்திருக்க வேண்டும். அதனை விடுத்துப் புலிகளோடு முரண்படுவதற்கும், தங்களது கௌரவத்தை நிலை நாட்டவுமே அவர்கள் முயல்கின்றனர். இவ்வாறானோரிடம் செல்ல நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இங்கேயே இருக்கிறோம்” என்றனர். பின்னாளில் மகளிர் படையணிக்கான பயிற்சிகள் ஆரம்பமானபோது அவர்களும் அதில் இணைந்து கொண்டனர். இவர்களுடன் லலிதா என்ற மாணவியும் சேர்ந்து கொண்டார். இவருக்கு ஜனனி என்ற இயக்கப்பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் செஞ்சோலை என்ற அமைப்புத் தொடக்கப்பட்ட போது அதன் பொறுப்பாளர் ஆனார். `பெரியம்மா` என்று உறவு முறையால் அந்தக் குழந்தைகளால் அழைக்கப்பட்டார். 2008 பிற்பகுதியில் தனது பொறுப்பைத் தனக்கு அடுத்தவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் களமாடப் போனார். அங்கேயே அவரது வாழ்வு முடிந்தது.

மாவீரர் நாள் பாடலுக்கு யோசனை!
ஈ.பி.ஆர்.எல்.எவ் வில் இருந்து வந்த இரு தோழியரில் ஒருவருக்கு ஜெயா எனப் பெயர் சூட்டப்பட்டது. இவர் பின்னர் விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியற் துறைப் பொறுப்பாளராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். இன்னொரு வரலாற்று முக்கியத்துவம் இவருக்கு உண்டு. 1992 ஆம் ஆண்டு நடைபெற இருந்த மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் குறித்த முன்னோடிச் சந்திப்பு ஒன்று பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் ” மாவீரர்களின் பெற்றோரும், போராளிகளும் இணைந்து பாடக்கூடியதாக உணர்வுபூர்வமான ஒரு பாடலை இயற்றி இந்நிகழ்வில் பா டவேண்டும்” என்ற ஆலோசனையை முன் வைத்தார் இவர். உடனே புதுவை இரத்தினதுரை பெருவிரலை உயர்த்தி இந்த ஆலோசனையை வரவேற்றார். ” உடனே அதைச் செய்வோம்“ என்று கூறியபடியே புதுவை இரத்தினதுரையைப் பார்த்துத் தலையாட்டினார் பிரபாகரன். ஆண்டு தோறும் பலலட்சக்கணக்கான வர்களின் கண்ணீரை வரவழைக்கக் கூடிய இப் பாடலை புதுவை இரத்தினதுரை இயற்ற , கண்ணன் இசையில் வர்ணராமேஸ்வரன் பாடினார். எப்படியோ இப் பாடல் உருவாக்கத்துக்கான யோசனையை முன் வைத்தவர் இவர்தான் என்பதை அச் சந்திப்பில் கலந்து கொண்டோர் என்றும் நினைவில் வைத்திருப்பர்.
மட்டக்களப்பின் வரலாற்றிலிலும் இவருக்கு ஒரு இடமுண்டு. மகளிருக்கான பயிற்சி முகாமை அங்கு அமைத்து. ஒரு படையணியை உருவாக்கியவர் இவர். இப் பயிற்சி முகாமில் உருவானோரில் முக்கியமானவர் வாஸந்தி என்ற சுகுணா (இவர் பற்றிப் பிறகு பார்ப்போம் )
மாவீரர் நாள் தொடர்பான சந்திப்புப் பற்றி இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும்.இது வரை மாவீரர்கள் பற்றி ஈழநாதம், விடுதலைப் புலிகள், சுதந்திரப் பறவைகள் என்பன வற்றில் வெளிவந்த கட்டுரைகளை அந்தந்தப் பிரிவுகள் அச்சிட்டு மாவீரர் பணிமனையின் பேரில் வெளியிட வேண்டுமென போராளி ஒருவர் கருத்துத் தெரிவித்தார். ஈழ நாதத்தில் `விழுதுகள்` என்ற தலைப்பில் பின்னர் மரணித்தவர்களான சு.ப.தமிழ்ச் செல்வன், காஸ்ரோ, வசந்தன்,மலரவன், முதலானோரும் `ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்` எனும் தலையங்கத்தில் விடுதலைப் புலிகளில் வசந்தனும் சுதந்திரப்பறவைகளில் தமிழவள் முதலானோரும் எழுதியிருந்தனர்.இக்கருத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விழுதுகள் தொடரில் லக்ஸ்மன் ((ஆரையம்பதி – மட்டக்களப்பு) பற்றிய கட்டுரை உணர்வு பூர்வமாக இருந்ததெனவும் பொன். வேணுதாஸ் பற்றிய ஆக்கம் அவரது முக்கியத்துவத்தை மற்றவர்கள் அறியும் வகையில் இருந்ததாகவும் பிரபாகரன் குறிப்பிட்டார். பொன் .வேணுதாசின் துணைவியாரின் படுகொலை குறித்து சிரித்திரனில் வெளிவந்த கட்டுரையையும், ஈழ நாதத்தில் கதைவடிவத்தில் சின்ன பாலா எழுதியதையும் தான் படித்ததாகவும் இரு வடிவங்களும் நன்றாகவே இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உண்ணாவிரதம் இருந்தோரில் நாலாமவர் மதிவதனி ஏரம்பு. இவரது உறவினர்கள் சென்னையில் இருந்தனர். எனவே அவர்களுடன் தொடர்பு கொண்டு இவரைக் கையளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார் பிரபாகரன். இவரை ராகவன் அழைத்துச் சென்று அவர்களிடம் ஒப்படைத்தார். சுறுசுறுப்பான இடத்தில் பாலா அண்ணர், திருமதி பாலா, உண்ணாவிரதமிருந்த மற்ற மூவர் எனப் பலருடன் நன்றாகப் பழகிவிட்டு ஒரு வீட்டில் தனியாக அடைந்து கிடக்க அவருக்குப் பிடிக்க வில்லை. மூன்றாம் நாளே திரும்பி வந்துவிட்டார். பின்னாளில் இவரே பிரபாகரனின் வாழ்க்கைத் துணையானார். மூன்று குழந்தைகளின் தாயானார். இதற்கு மேல் விபரிக்கத் தேவையில்லை .
***

புலிகளில் பழிபோட கொள்ளையடித்த ஈ.பி.ஆர்.எல்.எவ்!
மூன்றாவது முரண்பாடு மட்டக்களப்பில் ஏற்பட்டது. மகிழடித்தீவில் செரண்டிப் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இருந்தது. கொக்கட்டிச்சோலைப் பகுதியைச் சேர்ந்த அனேகர் இங்கே தொழில் வாய்ப்புப் பெற்றனர். இங்கு பிரஜைகள் குழுப் பிரமுகரான சாம்.தம்பிமுத்துவும் வெளிநாட்டவரும் இணைந்து இறால் வளர்ப்பில் ஈடுபட்டனர். ஒரு நாள் இரவு இந்த இறால் பண்ணையில் கொள்ளை நடந்தது. மோட்டார்கள் முதலான பெறுமதியானவற்றை ஆயுத முனையில் கொள்ளையிட்டவர்கள் தோணிகளில் அவற்றை ஏற்றி வாவி வழியாகக் கொண்டு சென்றனர். கொள்ளை நடந்த அடுத்த நாள் காலை ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் குணம் என்பவர் சைக்கிளில் வந்த புலிகள் உறுப்பினர் பசீரை வழிமறித்து இரவு நடந்த விடயத்தைக் கூறினார்.
மேலும் ” தோழர்! கொள்ளையடிக்க வந்தவர்கள் சில பணியாட்களைத் தாக்கியுள்ளனர். அத்துடன் தூஷண வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதெல்லாம் மோசமான வேலை” என்றார்.அதற்குப் பசீர் ” உண்மைதான் மட்டக்களப்பைப் பொறுத்தவரை தூஷண வார்த்தைகளைப் பயன்படுத்துவதென்றால் அது புளொட்டின் வேலையாகத்தான் இருக்கும் . அவர்களிடம் இதைப்பற்றிக் கேட்டால் முரண்பாடுதான் ஏற்படும்” எனக்கூறிவிட்டு நகர்ந்தார். தொடர்ந்து மகிழடித்தீவு ஆஸ்பத்திரி விடுதியில் தங்கியிருக்கும் ஒருவரைச் சந்திக்கச்சென்றார்.இவரும் அந்த இறால் பண்ணையில் பணியாற்றுபவர். ” தாங்களே கொள்ளையடித்து விட்டு எதுவும் தெரியாதது மாதிரி உங்களிடம் சொல்கிறார்கள். இவர்கள் தமக்கிடையே ஒருவருக்கொருவர் காக்கா, கடவுள், காந்தன் என்றெல்லவா அழைத்துக் கொண்டார்கள்“ என்று சொன்னார் இவர். “கொள்ளையர்கள் எவரும் இந்தப் பகுதிக்குப் பரிச்சயம் இல்லாதவர்கள். இதே வேளை இக் கொள்ளைச் சம்பவத்தில் இறால்பண்ணைத் தொழிலாளர் ஒருவருக்குப் பங்கிருக்கிறது. இருட்டில் மறைந்திருந்தே அவர் எங்கெங்கு என்னென்ன பொருட்கள் உள்ளன என அவர்களுக்குச் சொல்லிக்கொண்டு இருந்தார்“ எனவும் இவர் மேலும் குறிப்பிட்டார். தொடர்ந்து விசாரித்ததில் கொள்ளையர்களுக்கு உதவிய பணியாளர் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆதரவாளர் என்றும் புளியந்தீவைச் சேர்ந்த அவர் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி பஸ்ஸில் கடமைக்கு வருபவர் எனவும் அவரது பெயரையும் சொன்னார்.
சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அன்று பிற்பகல் மட்டுநகரிலிருந்து வரும் மினி பஸ்சுக்காக மகிழடித்தீவுச் சந்தியில் காத்திருந்தார் பசீர் . அது வந்ததும் அதனை மறித்தார். குறிப்பிட்ட பணியாளரின் பெயரைச் சொல்லி அவரைக் கீழே இறங்குமாறு கூறினார். எவரும் இறங்கவில்லை. எனவே ஒவ்வொருவரது அடையாள அட்டைகளையும் வாங்கிப் பார்க்கத் தொடங்கினார். உடனே சம்பந்தப்பட்டவர் தானாக எழும்பி நின்றார். நிமிர்ந்து பார்த்த பசீரிடம் தனது பெயரைச் சொன்னார். ” சரி கீழே இறங்குங்கள் ” என்றார் பசீர். அவ் வேளை மினி பஸ் சாரதி ” மட்டக்களப்பிலிருந்து எனது வாகனத்தில் வரும் அனைவருக்கும் நான் தான் பொறுப்பு. நீங்கள் வந்து வெள்ளைக்காரரிடம் சொல்லி விட்டு இவரைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள்” என்றார். அதனையேற்று இறால்பண்ணைக்குச் சென்ற பசீர் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் வெள்ளைக்காரரிடம் சொல்லி விட்டு அவரை அழைத்துச் சென்றார் .

சவக்காலையில் தானாகவே வெளிவந்த உண்மை!
பசீர் கூட்டிச் சென்ற இடம் முனைக்காட்டிலிருந்த சவக்காலை. அங்கே அவரை ஓரிடத்தில் இருக்கச் சொன்னார். அங்கு இருவர் குழி தோண்டிக்கொண்டு இருந்தனர். அதைப் பார்த்ததும் அவருக்கு முழி பிதுங்கியது. கண்கள் கலங்கின. குழி வெட்டியோரில் ஒருவர் வந்து ” ஆழம் போதுமா ?” எனப் பசிரைக் கேட்டார் . தான் கூட்டிக்கொண்டு போனவரைத் தலையிலிருந்து கால் வரை பார்த்த பசீர் . ” இன்னும் கொஞ்சம் நீளமாக வெட்டுங்கள் ” என்றார் . அவ்வளவுதான் – அதுவரை விம்மிக்கொண்டிருந்தவர் ஓங்கிப் பெருங்குரலெடுத்து அழுததுடன் கொள்ளை எப்படி நடந்தது என்று சொன்னார். எத்தனை பேர் வந்தனர், என்ன என்ன பொருட்களைக் கொள்ளையடித்தனர் என்ற விபரங்களுடன் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆதரவாளர் என்றும் கடகடவெனச் சொல்லிக்கொண்டு போய் இறுதியில் தன்னைச் சுட்டுவிடாதீர்கள் என்று கெஞ்சினார். எந்த விசாரணைக்கோ மேலதிக கேள்விக்கோ அவசியமில்லாமல் போய் விட்டது.
குழி வெட்டியவர்களுடன் அவரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு முதலைக்குடாவுக்குச் சென்றார் பசீர். அங்கே காலையில் சந்தித்த குணமும், பின்னாளில் வடக்கு – கிழக்கு மாகாண சபையில் நிதி அமைச்சராக விளங்கியவருமான கிருபாகரனும் இருந்தார். அவர்களிடம் பசீர் ” இரவு கொள்ளையடித்தவர்களில் ஒருவரைப் பிடித்து விட்டோம். எனக்குத் தெரியும் இது புளொட் தான் செய்ததென்று. காக்கா, கடவுள், காந்தன் என்று ஒருவரையொருவர். அழைத்ததன் மூலம் எங்கள் இயக்கத்தின் மீது பழியைச் சுமத்தியவர்களை நாங்கள் சும்மா விட முடியாது தானே ? இப்போது பிரச்சினை என்னவென்றால் அவர் தான் ஈ.பி. ஆர்.எல்.எவ் என்கிறார். எதற்கும் அவரை ஒரு தடவை வந்து பாருங்கள்” என்றார். இருவரும் பசீருடன் முனைக்காடு சவக்காலைக்குச் சென்றனர்.

அங்கே குழி வெட்டப்பட்டிருப்பதையும் பீதியுடன் நின்றவரையும் கண்டனர். மீன் முள்ளுச்சிக்கிய பிராமணனின் நிலை அவர்களுக்கு. விழுங்கவும் முடியாது. வெளியில் சொல்லவும் இயலாது. சவக்காலைக்கு வெளியிலேயே நின்று கொண்டார் பசீர். இருவரும் உள்ளே போய் விடயத்தைக் கேட்டனர். பின்னர் தயங்கித் தயங்கி வந்தனர். ” தோழர்! இவர் எங்களுடைய தோழர்தான். நகரத்திலுள்ள தோழர்கள் எமக்குத் தெரியாமல் வந்து இதனைச் செய்து விட்டனர்” என்றனர்.
” சரி ! இவர்கள் வேண்டுமென்றே எங்களில் பழி சுமத்தத்தானே காக்கா, கடவுள் ,காந்தன் எனக் கூறினர். இதனை மன்னிப்பது சிரமம்தானே? உங்களோடும் நான் நன்றாகப் பழகிவிட்டேன்.ஒன்று செய்யலாம் – இவர் நேரே வெள்ளைக்காரரிடம் போய் கொள்ளையைச் செய்தது ஈ.பி.ஆர்.எல்.எவ் தான் என்றும் புலிகளுக்கு இதில் சம்பந்தம் இல்லை எனவும் சொல்ல வேண்டும்” என்றார் பசீர். உடனே தலையாட்டினர். குணமும் கிருபாகரனும். வெள்ளைக்காரரிடம் அப்படியே சொன்னார் அந்தப் பணியாளர். அவ்வேளை பசீர் ” அவர்கள் ஆயுதமுனையில் மிரட்டித்தான் தமது கொள்ளைக்கு உதவவேண்டும் என்றார்கள். இவரும் பயத்தில் சம்மதித்து விட்டார். தயவு செய்து இவரைப் பணியிலிருந்து நீக்கி விடாதீர்கள். இவரை நம்பித்தான் இவரது குடும்பம் இருக்கிறது” என்றார். உண்மையில் இவரிடம் எந்தக் கேள்வியோ விபரத்தையோ கேட்டிருக்க வில்லை பசீர். வெள்ளைக்காரர் சம்மதித்தார். அடுத்த நாள் சிவாத் தோழர் என்பவர் முதலைக்குடாவுக்கு வந்தார். அவர்தான் தமது பொறுப்பாளர் என குணம் அறிமுகப்படுத்தினார். இறால் பண்ணை விவகாரத்தில் தமது பக்கம் தவறு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவர் போய்ச் சில நாட்களில் ” காக்கா , கடவுள் , காந்தன் என இவர்கள் மட்டுமா பெயர் வைக்க முடியும்? நாங்கள் வைக்கக் கூடாதா ? என சில ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள் புலிகள் உறுப்பினரிடம் கேட்டனர். தலை இருக்க வால் ஆடுகிறது என நினைத்துக்கொண்டனர் புலிகள்.
***

ஈ.பி சுதாவைக் காப்பாற்றிய புலி ஆதரவாளர்!
முனைக்காடு என்றதும் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். பின்னாளில் செங்கலடியில் 16/09/1985 அன்று அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார் புலிகள் இயக்க உறுப்பினர் மைக்கல் (நல்லையா பாரதிதாசன்). இவரது மாமன் ஏறாவூரைச் சேர்ந்த சுதா. ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினரான இவர் அதிரடிப்படையினரால் கைதானார். வீரதுங்கா என்ற அதிகாரியினால் இவர் மோசமான சித்திரவதைக்குள்ளானார். காலில் ஒரு விரலையும் இழந்தார். இவரைத் தீவிரவாத இளைஞர்களைக் காட்டச் சொல்லி அதிரடிப்படையினர் முனைக்காட்டுக்குக் கொண்டு வந்தனர். அங்கு வந்து சேர மாலையாகி விட்டது. வாகனத்தில் இவரை மட்டும் விட்டு விட்டு சகல படையினரும் தேடுதலுக்குப் புறப்பட்டனர். வாகனத்திலிருந்து இறங்கித் தவழ்ந்து வந்த சுதாவை புலிகளின் தீவிர ஆதரவாளரும், பின்னர் மாவீரரான ஒருவரின் சகோதரருமான ஒருவர் கண்டார். சுதாவைத் தோள்மேல் வைத்துத் தூக்கிக் கொண்டு ஓடிப் பத்திரமான இடத்துக்குக் கொண்டு வந்தார். இரவாகி விட்டதால் இவர்களைத் தேட முடியவில்லை அதிரடிப் படையினரால். மேலதிகமாக ஆட்களைப் பிடிக்க வந்தவர்கள் கையில் கிடைத்தவரையும் இழந்த நிலையில் திரும்பினர். சில நாட்களின் பின் சித்தாண்டியில் வைத்துமீண்டும் படையினரிடம் சிக்கினார் சுதா. காலில் காயம். முறையான வைத்தியம் கிடைக்காததால் ஒரு காலை இழந்தார்.
சுதாவுக்கு சுவிஸ் நாடு அரசியல் அடைக்கலம் கொடுத்தது. இவர் அங்கேயே வாழ்ந்து வருகிறார். இவரைச் சித்திரவதைக்குள்ளாக்கிய அதிரடிப்படை அதிகாரி வீரதுங்கா 03 /04 /1985 அன்று கொடுவாமடுவில் நிகழ்ந்த கண்ணி வெடித் தாக்குதலில் பலியானார். பெருந்தொகையான படையினர் பலியான இத் தாக்குதலை ஈரோஸ் மேற்கொண்டது. கோப்பாவெளிப் பகுதியில் சுற்றி வளைப்பை மேற்கொண்டு விட்டுத் திரும்புகையிலேயே இத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டது.சுற்றிவளைப்பில் கைதாகி இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்களான சீ. தவராஜா , ராஜன் ஆகியோர் இத்தாக்குதலில் உயிரிழந்தனர்.

ஈரோசுக்கு ரவைகள் அன்பளித்த பிரபாகரன்!
படையினரிடமிருந்து ஈரோசினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்குப் போதுமான ரவைகள் இருக்கவில்லை. இது தொடர்பாக அப்போதைய ஈரோஸ் பிரமுகர் பாலகுமார் பிரபாகரனைத் தொடர்புகொண்டார். கடல் வழியாக மிகுந்த ஆபத்தின் மத்தியில் கொண்டுவரப்பட்டு, காடுவழியாகச் சுமந்து வந்த 5.56 ரவைகளின் ஒரு பகுதியை ஈரோஸிடம் அன்பளிப்பாக வழங்கினார் புலிகள்
தொடரும்….

Related Posts